அம்னோவுடன் கலந்துரையாடல் (muzakarah) கிடையாது என்கிறார் ஹாடி

அம்னோவுடன்  கலந்துரையாடல் (muzakarah) நடத்தும் விஷயமே எழவில்லை என்பதால்  அது நடைபெறப் போவதில்லை என பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று தெளிவுபடுத்தியுள்ளார்.

அரசு சாரா அமைப்புக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தும் பாஸ் அம்னோவுடன் கலந்துரையாடலை ஏன் நடத்தவில்லை என மே 13ம் தேதி நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அந்த விவகாரம் மீண்டும் எழுந்ததாக அவர் சொன்னார்.

பாஸ் கட்சி தனது இஸ்லாமியக் கொள்கைகளிலிருந்து விலகிச் சென்று விட்டதாக கூறிக் கொள்ளும் அரசு சாரா அமைப்புக்களுடன் விவாதம் நடத்த கட்சி தயாராக இருப்பதாக ஹாடி குறிப்பிட்டார்.

“ஆகவே அம்னோவுடன் கலந்துரையாடல் நடத்தும் பிரச்னை எழவே இல்லை. அது பழைய விவகாரம். எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு அரசியல் ஆதாயத்திற்காக அம்னோ அந்த விஷயத்தைப் பயன்படுத்தி வருகின்றது. அது அம்னோ திட்டமாகும்.”

“அம்னோவுடன் கலந்துரையாடல் (muzakarah) கிடையாது. நாங்கள் அதற்கு எதிராகப் போட்டியிடுவோம். ஏற்கனவே நடத்தப்பட்ட விவாதங்களில் அம்னோ உண்மையாக நடந்து கொள்ளவில்லை,” என்றும் பாஸ் தலைவர் குறிப்பிட்டார்.

 

TAGS: