அன்வார் பெர்சே 3.0 மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

தெரு ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கு கொண்டதாக அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், துணைத் தலைவர் அஸ்மின் அலி அந்தக் கட்சியின் உச்ச மன்ற உறுப்பினரான பத்ருல் ஹிஷாம் ஷாஹ்ரின் ஆகியோர் மீது இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

அன்வார் தமது துணைவியார் டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயிலுடன் காலை மணி 9.15க்கு அந்த நீதிமன்றத்தைச் சென்றடைந்தார்.

அன்வாருக்கு எதிரான குதப்புணர்ச்சி வழக்கு llல் அரசுத் தரப்புக்குத் தலைமை தாங்கிய முன்னாள் சொலிஸிட்டர் ஜெனரல் முகமட் யூசோப் ஜைனல் அபிடின், இந்த வழக்கில் அந்த எதிர்த்தரப்புத் தலைவருக்காக வாதாடும் மூத்த வழக்குரைஞர் கர்பால் சிங்-குடன் இணைந்து கொண்டுள்ளது பலருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

அந்தக் குற்றச்சாட்டு தமக்கு எதிராக நடத்தப்படும் ‘அரசியல்’ பிரச்சாரத்தில் இன்னொரு நடவடிக்கை என அன்வார் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி மாஹ்முட் அப்துல்லாவிடம் கூறினார்.

அன்வாருக்கு சொந்த ஜாமீன் அனுமதிக்கப்பட வேண்டும் என அவரது வழக்குரைஞர்களான கர்பாலும் யூசோப்பும் கேட்டுக் கொண்டனர். ஆனால் அதனை அரசாங்க வழக்குரைஞர் டிபிபி அப்துல் வஹாப் முகமட் ஆட்சேபித்தார்.

நீதிபதி 500 ரிங்கிட் ஜாமீன் தொகையை நிர்ணயம் செய்து ஜுலை 2ம் தேதி அந்த வழக்கு மீண்டும் சமர்பிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

இதனிடையே அஸ்மின் சார்பில் வழக்குரைஞர்களான சிவராசா ராசைய்யாவும் குர்ச்சரான் சிங்-கும் ஆஜரானார்கள். பத்ருல் ஹிஷாமை வழக்குரைஞர் லத்தீப்பா கோயா பிரதிநிதித்தார்.

நீதிமன்றத்தில் டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், பாஸ் எம்பி டாக்டர் முகமட் ஹட்டா ராம்லி ஆகிய பல எதிர்க்கட்சித் தலைவர்கள் நீதிமன்றத்தில் காணப்பட்டனர்.

அண்மையில் நாடாளுமன்றம் நிறைவேற்றிய அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதலாவது நபர்கள் அந்த மூன்று பிகேஆர் தலைவர்களும் ஆவர்.

குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் அன்வாரும் அஸ்மினும் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள் என்னும் தங்கள் தகுதியை இழந்து விடுவார்கள்.

அந்தச் சட்டத்தின் கீழ் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம்.

நீதிமன்றம் ஒன்றினால் குற்றவாளை எனத் தீர்ப்பளிக்கப்பட்டு ஈராயிரம் ரிங்கிட் அல்லது அதற்கு மேற்பட்ட அபராதம் அல்லது ஒராண்டுக்கு மேற்போகாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர் ஒருவர் இயல்பாகவே தங்கள் பதவிகளை இழந்து விடுவர்.

பெர்சே 3.0 பேரணியில் பங்கு கொண்டதற்காகவும் டாத்தாரான் மெர்தேக்காவில் கூடுவதற்கு தடை விதித்து ஏப்ரல் 26ம் தேதி மாஜிஸ்திரேட் ஸாக்கி அஸ்ராப் ஜுபிர் வெளியிட்ட ஆணையை மீறியதாகவும் அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் 4(2) பிரிவின் கீழ் அந்த மூவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஏப்ரல் 28ம் தேதி பிற்பகல் மணி 2.30க்கும் 3.00 மணிக்கும் இடையில் அவர்கள் அந்தக் குற்றத்தைப் புரிந்ததாகவும் கூறப்பட்டது.

கூடுதல் குற்றச்சாட்டு

அன்வாரும் அஸ்மினும் ஐந்து பெர்சே 3.0 ஆதரவாளர்களுடன்  இணைந்து டாத்தாரான் மெர்தேக்காவை சுற்றிலும் போடப்பட்டிருந்த தடுப்பை மீறுவதற்கு ஏப்ரல் 26ம் தேதி மாஜிஸ்திரேட் ஸாக்கி அஷ்ராப் ஜுபிர் பிறப்பித்த நீதிமன்ற தடை ஆணையை மீறுவதற்கு ஆர் தங்கம் ஜி ராஜேஷ் குமார், பார்ஹான் இப்ராஹிம் அல்லது அலியாஸ் ஆகியோருக்கு உடைந்தையாக இருந்ததாகவும்  அவர்களைத் தூண்டி விட்டதாகவும்  கூறும் இன்னொரு குற்றச்சாட்டையும் அவர்கள் எதிர்நோக்குகின்றனர்.

188வது பிரிவின் கீழ் சுமத்தப்பட்ட அந்தக் குற்றச்சாட்டுக்கு ஒரு மாதம் வரையில் சிறைத்தண்டனை அல்லது 400 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.