பாஸ் கட்சி அடுத்த மாதம் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முக்தாமார் எனப்படும் தனது ஆண்டுப் பொதுக் கூட்டத்தை நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது.
13வது பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தும் பொருட்டு அவ்வாறு தள்ளி வைக்கப்படுவதாக கட்சியின் தலைமைச் செயலாளர் முஸ்தாப்பா அலி கூறினார்.
அதற்குப் பதில் அலோர் ஸ்டார் டாருல் அமான் அராங்கில் ஜும் முதல் தேதி அது பேரணி ஒன்றை நடத்தும். பொதுத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் அந்தப் பேரணி அமைந்திருக்கும்.
மே 13ம் தேதி நிகழ்ந்த பாஸ் மத்தியக் குழுக் கூட்டத்தில் ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தள்ளி வைப்பது என முடிவு செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
“நாங்கள் விரைவில் நடத்தப்படும் என எதிர்ப்பர்க்கப்படும் பொதுத் தேர்தல் மீது முழுக் கவனம் செலுத்தி வருகிறோம்,” என தொடர்பு கொள்ளப்பட்ட போது முஸ்தாப்பா கூறினார்.
அந்தப் பேரணி தொடர்பில் விரைவில் கட்சியின் உயர் தலைவர்களுக்கு கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ரகசியக் கூட்டம் ஒன்றில் விளக்கமளிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் விசுவாச உறுதி மொழியை எடுத்துக் கொள்ளும் சடங்கும் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
2008ம் ஆண்டு தேர்தலில் பாஸ் கட்சி 83 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 231 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டது. அதில் 23 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 66 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாகை சூடியது.
அது கிளந்தானை தக்க வைத்துக் கொண்டதுடன் கெடாவில் பாரிசான் நேசனலையும் வீழ்த்தியது.
-பெர்னாமா