‘நஜிப் x அன்வார் விவாதத்திற்கான வேண்டுகோள் அதிகரிக்கிறது

அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதீனுக்கும் பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயிலுக்கும் இடையில் நேற்றிரவு நடைபெற்ற விவாதம் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக  ‘பிரதமர் நிலையிலான விவாதத்திற்கு’ வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பிரதமராகக் காத்துக் கொண்டிருக்கும் பக்காத்தான் ராக்யாட்டின் அன்வார் இப்ராஹிமுடன் விவாதம் நடத்துவதற்கான நேரம் வந்து விட்டதா என நேற்றைய விவாதத்தில் அனுசரணையாளராக பணியாற்றிய மாஸ்லி மாலிக் வினவிய போது கூட்டத்தினர் அனைவரும் எழுந்து நின்று கை தட்டி ஆதரவு தெரிவித்தனர்.

“2008ம் ஆண்டு நாம் மெகெயின் – ஒபாமா விவாதத்தைப் பார்த்தோம். 2010ம் ஆண்டு பிரவுன் -கிளக் – கேமருன் விவாதத்தைக் கண்டோம். 2011ம் ஆண்டு நஜிப்புக்கும் அன்வாருக்கும் இடையில் ‘பிரதமர் நிலையிலான விவாதத்திற்கு’ நாம் காத்திருக்கிறோம். அதற்கு நீங்கள் தயாரா ?” என மாஸ்லீ வினவினார்.

அதற்கு “நாங்கள் தயார்” என கூட்டத்தினர் பதில் அளித்தார்கள். அதுவும் ராபிஸி ஆதரவாளர்கள் நிறைந்திருந்த பக்கத்தில் ஆரவாரம் பலமாக இருந்தது.

அதனைத் தொடர்ந்து நேற்றைய நிகழ்வை நடத்திய சினார் ஹரியான் நஜிப்-அன்வார் விவாதத்திற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அந்த விவாதம் நடைபெற்றால் அதற்கும் அனுசரணையாளராக மாஸ்லீ பணியாற்றுவார்.

திடீர் யோசனை

மாஸ்லீ-யின் யோசனை “திடீரென” தெரிவிக்கப்பட்டது என்றும் “கருத்துக்கள் விவாதிக்கப்படுவதற்கு வகை செய்யும்” எந்த நிகழ்வையும் நடத்த சினார் ஹரியான் ஆயத்தமாக இருப்பதாக அந்த நாளேட்டின் தலைவர் ஹுசாமுடின் யாக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

“கௌரவமான முறையில் விவாதத்தில் பங்கு கொள்ள விரும்பும் யாருக்கும் சினார் ஹரியான் மேடை அமைத்துக் கொடுக்கும் என்றும்  ஹுசாமுடின் சொன்னார்.

“மக்கள் விரும்புவதும் அதுவே” எனத் தாம் கருதியதால் அந்த யோசனையைத் தாம் தெரிவித்ததாக  அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழக விரிவுரையாளருமான மாஸ்லி குறிப்பிட்டார்.

லண்டனில் கைரியுடன் முதலாவது விவாதத்தை நடத்திய பின்னர் விவாதத்திற்கு வருமாறு அன்வார் விடுத்துள்ள சவாலை ஏற்றுக் கொள்ளுமாறு நஜிப்பைக் கேட்டுக் கொள்ளுமாறு தாம் கைரியை வற்புறுத்தியதாக ராபிஸி சொன்னார்.

“நான் அந்தச் செய்தியை பிரதமரிடம் தெரிவித்து விட்டேன். அதனைப் பரிசீலிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நான் என் கடமையைச் செய்து விட்டேன்,” என கைரி நிருபர்களிடம் கூறினார்.

கடந்த ஆண்டு பொருளாதாரம் மீது தம்முடன் விவாதம் நடத்த வருமாறு முன்னாள் துணைப் பிரதமருமான அன்வார் நஜிப்புக்கு சவால் விடுத்தார். ஆனால் நஜிப் அதனை நிராகரித்ததுடன் அத்தகைய விவாதம் நிகழ்ந்தால் அந்த பிகேஆர் மூத்த தலைவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டு விடும் எனவும் குறிப்பிட்டார்.

 

TAGS: