முன்னாள் பன்னாட்டு வாணிக, தொழில் அமைச்சரான ரபிடா அசீஸ், மலேசிய தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களும் அவர்களின் நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஆக்கப்பணிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர தடையாக இருக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
மலேசிய விமான நிறுவனமும்(எம்ஏஎஸ்) சிக்கன விமான நிறுவனமான ஏர் ஏசியாவும் பங்குகளை மாற்றிக்கொள்ளும் திட்டம் ஒன்றைச் செய்து எட்டு மாதங்களுக்குப் பின்னர் அது கைவிடப்பட்டது பற்றிக் கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
“தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களும் அவர்களின் நிறுவனங்கள் மேலும் திறம்படச் செயல்படுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். தடுக்கக்கூடாது.விவகாரத்தை அரசியலாக்கக்கூடாது”, என ஏர் ஏசியா இணை நிறுவனமான ஏர் ஏசியா X-இன் தலைவருமான ரபிடா கூறினார்.
“நிறுவனம் தொழில் செய்யும் ஓர் அமைப்பு.அதன் பங்குதாரர்களுக்கு ஆதாயம் பெற்றுத் தருதல் அதன் பொறுப்பு.இதைத் தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் உணர வேண்டும்.
“நிறுவனங்கள் ஆதாயம் பெறுமானால் தொழிலாளர்களும்தான் நன்மை அடைவார்கள்”, என்றாரவர்.
கடந்த வாரம் முன்னாள் எம்ஏஎஸ் நிர்வாக இயக்குனரான அப்துல் அசீஸ் அப்துல் ரஹ்மானும் அதன் தொழிற்சங்கங்களுக்கு இதேபோன்ற வேண்டுகோளைத்தான் விடுத்தார். தொய்ந்து போயுள்ள எம்ஏஎஸ்-ஸைத் தூக்கி நிறுத்த அந்நிறுவனம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிர்ப்புக் காட்ட வேண்டாம்; பொறுமை காக்க வேண்டும் என்றாரவர்.
புதிய திட்டங்களுடன் செயல்பட நினைக்கும் அவ்விமான நிறுவனத்துக்கு அதன் 20,000 ஊழியர்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.