வியாபாரிகள், பேர்கர் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மேயருக்கு வேண்டுகோள்

பேர்கர் கடைக்காரர்களுக்கும் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு முன்னால் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள இரண்டு நாள் சந்தைக்கும் எதிராக நடவடிக்கை எடுக்காத கோலாலம்பூர் மேயர் அகமட் புவாட் இஸ்மாயிலை சிலாங்கூரைச் சேர்ந்த நகராட்சி மன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று சாடியுள்ளது.

அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் 1974ம் ஆண்டுக்கான சாலை, வடிகால், கட்டிடச் சட்டத்தின் 39வது பிரிவை மீறியுள்ளது தெளிவாகத் தெரியும் போது மேயர் ஏன் ஒரு கண்ணை மூடிக் கொண்டிருக்கிறார் என பத்து டிஏபி நகராட்சி மன்ற உறுப்பினர்கள் வினவினர்.

“பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கும் யாருக்கும் கூடினபட்சம் ஆயிரம் ரிங்கிட் வரையில் அபராதம் விதிக்கப்படுவதற்கு அந்தப் பிரிவு வகை செய்கிறது. அந்தப் பிரிவு சாலை ஒன்றில் ‘இடங்களை’ குறியிட்ட வியாபாரிகளுக்கும் பொருந்தும்,” என சுபாங் ஜெயா நகராட்சி மன்ற உறுப்பினரான இங் சூ ஹான் கூறினார்.

“அந்த வியாபாரிகள் மீது அகமட் புவாட் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மேயர். என்ன செய்ய வேண்டும் என நாம் அவருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டுமா ?”

கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் பெர்சே 3.0 பேரணிக்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகளை முழு மூச்சாக எடுத்ததையும் வியாபாரிகளுக்கு எதிராகக் கடைப்பிடிக்கும் மெத்தனப் போக்கையும்  ஒப்பிட்டால் இரண்டு விதமான தரங்கள் பின்பற்றப்படுவதாகத் தோன்றுகிறது என சிலாயாங் நகராட்சி மன்ற உறுப்பினர் எரிக் தான் கூறினார்.

“பெர்சே-யைப் பொறுத்த வரையில் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் டாத்தாரான் மெர்தேக்காவைச் சுற்றிலும் தடுப்பு வேலிகளை அமைத்தது.  தவறு நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய 2,000க்கும் மேற்பட்ட அமலாக்க அதிகாரிகளையும் அது அனுப்பியது. போலீசார் கூட ஒத்துழைப்பு அளித்தார்கள்.”

“ஆனால் இந்த விவகாரத்தில் எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேயர் மிகவும் அமைதியாக இருக்கிறார்.”

அகமட் புவாட் தமது கடமைகளைச் செய்யத் தவறியுள்ளதால் அவர் பதவி விலக வேண்டும் என அந்த நகராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டாக விடுத்த அறிக்கை கேட்டுக் கொண்டது.

“மேயர் எடுத்துள்ள பல முடிவுகள் பிரச்னைகளைத் தீர்க்கவில்லை. மாறாக பிரச்னைகளை சிக்கலாக்கியுள்ளன. அது கோலாலம்பூர் வாழ் மக்களுடைய விருப்பங்களுக்கு முரணானதாகும்,” என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.

“ஆகவே மேயர் உடனடியாகப் பதவி துறக்க வேண்டும். ஊராட்சி மன்றத் தேர்தல்கள் மீண்டும் நடத்தப்படுவதற்கு உதவியாக ஊராட்சி மன்றச் சட்டத் திருத்துமாறும் நாங்கள் பிஎன் கூட்டரசு அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.”

சிலாங்கூரில் உள்ள 67 டிஏபி நகராட்சி மன்ற உறுப்பினர்களில் 30 பேர் அந்த அறிக்கைக்கு அங்கீகாரம் அளித்துள்ளனர்.

மேயர் பிஎன்-னால் நியமிக்கப்படாமல் மக்களாக் தேர்வு செய்யப்பட்டிருந்தால் பெர்சே பேரணி 3.0 டாத்தாரான் மெர்தேக்காவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.