நாட்டின் வரலாற்றில் மிகவும் தகுதிகுறைந்த துணைப் பிரதமர் என்றால் அது முகைதின் யாசின்தான் என்று டிஏபி கூறியுள்ளது.அவரால் குவாந்தானில் சீன உயர்நிலைப் பள்ளிக்கூடம் ஒன்று கட்ட அனுமதி அளிக்கக்கூட முடியவில்லை.
நஜிப் அப்துல் ரசாக் கல்வி அமைச்சராக இருந்தபோது 1999-இல் ஜோகூர் ஃபூன் இயு உயர்நிலைப் பள்ளி, கூலாயில் அதன் கிளையை அமைக்க அவர் ஒப்புதல் கொடுத்தை டிஏபி விளம்பரப் பிரிவு துணைச் செயலாளர் தியோ நை சிங் சுட்டிக்காட்டினார்.
“(அப்படியிருக்க) குவாந்தானில் புதிதாக ஓர் உயர்நிலைப்பள்ளி அமைக்க ஒப்புதல் கொடுக்கும் அதிகாரம் தமக்கில்லை என்கிறாரே முகைதின், அது ஏன்? நாட்டின் வரலாற்றில் மிகவும் தகுதிகுறைந்த துணைப்பிரதமர் இவர்தான்”, என்று தியோ கூறினார்.
ஒரு புதிய சீன உயர்நிலைப் பள்ளி அமைக்க பிஎன் அரசாங்கம்தான் மறுக்கிறது.மற்றபடி அதற்காக கல்வி விதிமுறைகளில் திருத்தம் செய்வதில் சிரமம் எதுவும் இருக்காது என்றாரவர்.
“சீன உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கையை” அப்படியே வைத்துக்கொள்ள இணக்கம் தெரிவித்த தலைவர்கள் யார் என்பதையும் முகைதின் பெயர் குறிப்பிட வேண்டும் என தியோ கேட்டுக்கொண்டார்.
“மக்களுக்கு அதைத் தெரிந்துகொள்ளும் உரிமை உண்டு.சீனமொழிக் கல்விபெறும் உரிமையை மக்களின் விருப்பத்துக்கு மாறாக விற்பனை செய்ய நினைக்கும் அந்த மசீச,கெராக்கான் அல்லது எஸ்யுபிபி தலைவர்கள் யார்?”, என்றவர் வினவினார்.
மலாக்கா சீனர் கல்வி முற்போக்குச் சங்கமும் குவாந்தானில் சுயேச்சை சீன உயர்நிலைப் பள்ளி அமைக்க அனுமதியளிக்க மறுத்த முகைதினைச் சாடியது.
இதற்கான உண்மையான காரணம், அரசாங்கத்தின் ஒரேமொழிக் கல்விக்கொள்கைதான். அது தாய்மொழிப் பள்ளிகளை இழுத்துமூடும் நோக்கத்தைக் கொண்டது என்றந்த சங்கம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியது.
முகைதினிடம் மூன்று கேள்விகளையும் அது முன்வைத்துள்ளது:
-அவருக்கு அந்த அதிகாரம் இல்லை என்றால், வேறு யாரிடம் அது உண்டு?
-சுயேச்சை சீன உயர்நிலைப் பள்ளி அமைப்பதை எந்தக் கொள்கை, சட்டம் அல்லது உடன்பாடு தடுக்கிறது?
-அப்படி ஒரு கொள்கை, சட்டம் அல்லது உடன்பாடு இருந்தால் அது எப்போது அமலுக்கு வந்தது?
ஜோகூர் ஃபூன் இயு உயர்நிலைப் பள்ளி ஒரு கிளையை அமைக்க அனுமதி அளித்த அரசாங்கம், கோலாலம்பூர் சொங் ஹுவா உயர்நிலைப் பள்ளி குவாந்தானில் ஒரு கிளை அமைப்பதை அனுமதிக்க மறுப்பது ஏன் என்றும் அச்சங்கம் வினவியது.
சீனர் சமூகம் குவாந்தானில் சுயேச்சை உயர்நிலைப்பள்ளி அமைக்க கோரிக்கை விடுத்திருப்பதாகவும் ஆனால் கல்விக் கொள்கையில் சில வரைமுறைகள் இருப்பதாகவும் முகைதின் கூறியதாக நேற்று பெர்னாமாவிலும் பல நாளேடுகளிலும் அறிவிக்கப்பட்டிருந்தது.
திங்கள்கிழமை குவாந்தானில் 5,000 பேர் திரண்டு அக்கோரிக்கையை எழுப்பியது குறித்து கருத்துக் கேட்கப்பட்டதற்கு,“இவ்விசயத்தில் என் கைகள் கட்டப்பட்டுள்ளன. அதற்குக் கல்விக் கொள்கையில் அல்லது கல்விச் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும்”, என்றவர் கூறினார்.
‘கதவு இன்னும் திறந்துள்ளது’
மசீச துணைத் தலைவர் லியோ தியோங் லாய், குவாந்தானில் உயர்நிலைப் பள்ளி அமைக்க அனுமதி அளிக்கும் கதவு இன்னும் திறந்தே உள்ளது என்கிறார்.
இச்செய்தியைச் சீனர் சமூகத்திடம் தெரிவிக்குமாறு துணைப்பிரதமர் தம்மைக் கேட்டுக்கொண்டதாக இன்று சீன நாளேடுகளிடம் அவர் கூறினார்.
இன்று காலை முகைதினைச் சந்தித்ததாகத் தெரிவித்த சுகாதார அமைச்சருமான லியோ, அவ்விவகாரம் தொடர்பில் மேல்நடவடிக்கை எடுக்குமாறு மசீச கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
மசீச மத்திய செயலவையில் அது பற்றி மேலும் விவாதிக்கப்படும் என்று கூறிய அவர் மேல்விவரம் தெரிவிக்க மறுத்தார்.