அம்பிகாவின் வீட்டின்முன் ஆர்ப்பாட்டம்: நஜிப்பின் நற்பணியை கீழறுக்கும் வேலையாம்!

பெர்சே 3.0 இன் தலைவர் எஸ்.அம்பிகாவின் வீட்டின்முன் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் பிரதமர் நஜிப்பையும் பாரிசான் நேசனலையும் நாசப்படுத்தும் முயற்சியாகத் தெரிகிறது.

புக்கிட் டாமன்சாராவிலுள்ள அவரது வீட்டின்முன் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கடைகளைத் திறக்கும் திட்டம் குறித்து கருத்துரைத்த ஒரு மஇகா தலைவர் அதன் ஏற்பாட்டாளர்கள் வெறுக்கத்தக்க நிலைக்கு இறங்கியுள்ளதைக் கண்டித்தார்.

2009 ஆம் ஆண்டில் பதவி ஏற்ற பின்னர் நஜிப் மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என்று கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரான எஸ்.வேள்பாரி கூறினார்.

“ஆனால் ஆர்ப்பாட்டங்கள் என்று கூறப்படும் இவை எல்லாவற்றையும் பின்னோக்கித் தள்ளுகின்றன. இவை பிரதமரின் நற்பணிகளை கீழறுக்க வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளாக தெரிகின்றன.

“இது தொடருமானால், மலாய்க்காரர் அல்லாதவர்களின் வாக்குகளை பிஎன் மறந்து விடலாம். என்னுடைய பல மலாய் நண்பர்கள் இப்போது நடந்துகொண்டிருப்பவை குறித்து ஆழ்ந்த வெறுப்படைந்துள்ளனர், ஆக நாம் அவர்களுடைய வாக்குகளையும்கூட மறந்து விடலாம்”, என்று எப்எம்டியிடம் கூறினார்.

இதைக் கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டால், அடுத்த பொதுத் தேர்தலில் பக்கத்தான் ரக்யாட் வெற்றி பெறுவது பற்றிய கேள்வி எழாது ஏனென்றால் இந்த மடத்தனமான செயல்கள் பாரிசான் புத்ராஜெயாவை இழப்பதை உறுதிசெய்துவிடும் என்று வேள்பாரி எச்சரித்தார்.

“தைரியமிருந்தால்”

அந்த கடைக்காரர்கள் அவர்களுடைய கடைகளை பாஸ் தலைவர்கள் நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் அல்லது அப்துல் ஹாடி அவாங் ஆகியோரின் வீடுகளுக்குமுன் போடுமாறு அந்த மஇகா தலைவர் அவர்களுக்கு சவால் விட்டார்.

“உங்களுக்கு உண்மையிலேயே தைரியம் இருக்குமானால், போய் அவர்களின் அல்லது  (எதிரணித் தலைவர்) அன்வார் இப்ராகிம்மின் வீட்டின்முன் செய்யுங்கள் ஏனென்றால் அவர்கள் அனைவரும் பெர்சே பேரணியை ஆதரித்தனர்.

“கோழைகளாக இருக்காதீர்கள், ஒரு பெண்ணை தொல்லை செய்யாதீர்கள். இது வெறுக்கத்தக்கதும் துணிவற்றுதுமாகும்”, என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.

பெர்சேயை குறைகூறியவர்கள் பண்பாட்டை அவர்களது வாதத்திற்கு அடிப்படையாக வைத்து மலேசியர்கள் தெருப் போராட்டங்களில் பங்கேற்கக்கூடாது என்றனர்.

“இப்போது நான் இந்த கடைக்காரர்களைக் கேட்க விரும்புகிறேன், பெண்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் நமது பண்பாடா?”, அவர் வினவினார்.

அம்பிகாவின் வீட்டிற்கு வெளிப்புறத்திலுள்ள தெருவில் சாயம்-பூசி கடைகளுக்கு இடம் ஒதுக்கும் அந்த கடைக்காரர்களின் நடவடிக்கை வேண்டுமென்றே பொதுச் சொத்தை சேதப்படுத்துவதோடு அதனை ஏலம் விடுவது சட்டவிரோதமான தொழிலாகும் என்று வேள்பாரி கூறினார்.

“இது டிபிகேல் அலுவலகத்திற்கு வெளியில் இதர தரப்பினரும் இதுபோல் துண்டு போட்டு அவற்றை விற்கலாம் என்பதாகுமா?”, என்று அவர் வினவினார்.

பெர்சே பேரணிக்காக பிகேஆர் தலைவர்கள்மீது அரசாங்கம் குற்றம் சாட்ட முடியுமென்றால், கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்தின் உத்தரவை மீறியதற்காக இந்தக் கடைக்காரர்களையும் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று வேள்பாரி மேலும் கூறினார்.

“அவர்கள் தங்களுடைய திட்டத்தை நடைமுறை படுத்தினால், அது சட்டத்திற்கு முரணானதாகும். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். துரதிருஷ்டவசமாக, மடமையை சட்டவிரோதமாக்கும் சட்டம் இல்லை”, என்று அவர் வருத்தப்பட்டார்.

அம்பிகாவின் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்வதோ மறுப்பதோ வேறொரு பிரச்னையாகும். ஆனால், பண்பின் எல்லை மீறப்பட்டால், அதனைச் செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்று வேள்பாரி கூறினார்.

“ஒரு சில தரப்பினருக்கு மகிழ்ச்சியளிக்காது என்று பயந்துகொண்டு நாம் மௌனமாக இருக்க முடியாது”, என்று அவர் மேலும் கூறினார்.

கடுந்தன்னடக்கத்துடன் சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய நேரம்

சுயேட்சையான, நியாயமான தேர்தலுக்கான கோரிக்கையை முன்வைத்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற    பெர்சே 3.0 ஏப்ரல் 28 பேரணியைப் பொறுத்தவரையில், பாரிசான் கடுந்தன்னடகத்துடன் இக்கட்டான ஒரு சூழ்நிலையைத் தாங்கிக்கொள்ள வேண்டிய காலத்தில் இருக்கிறது என்று அவர் கூறினார்.

“பிரதமர் ஒரு பண்பான விவாத்தில் அம்பிகாவுடன் ஈடுபடுவதற்கான நேரம் இதுவாகும். இல்லையென்றால் சூழ்நிலை கட்டுப்பாட்டை மீறிச் சென்று நாட்டின் தோற்றத்திற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்”, என்றாரவர்.

பெர்சேயின் குரலுக்கு 100,000 மேற்பட்ட  மக்கள் செவிசாய்த்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை என்பதை வேள்பாரி சுட்டிக் காட்டினார்.

“இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களும் மலேசியர்கள்தானே? அவர்களையும்கூட அரசாங்கம் பிரதிநிதிக்கவில்லையா? ஆக, பண்பான முறையில் அம்பிகாவை சந்திப்பதற்கு ஏற்ற நேரம் வந்துவிட்டது.

“நமது பிரதமர் மக்களில் ஒருவர். அவர் தொடர்ந்து வாழ்க்கையில் பல்வேறு நிலைகளிலுள்ள மக்களுடன் தொடர்பு கொண்டுள்ளார். இப்போது அவர் அவருடன் (அம்பிகாவுடன்) தொடர்புகொள்ள வேண்டிய நேரமாகும். இது நான் அவருக்கு விடுக்கும் வேண்டுகோள். நஜிப் அதனைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்”, என்று வேள்பாரி மேலும் கூறினார்.

இல்லையென்றால், அடுத்த பொதுத் தேர்தலில் பாரிசான் தன்னைதானே அழித்துக்கொள்வதைச் சில சக்திகள் உறுதி செய்யும் என்று அவர் எச்சரித்தார்.

பெர்சே இயக்கத்துடன் சேர்ந்து கொண்டதற்காக எதிரணியை தூற்றிக்கொண்டிருக்க முடியாது ஏனென்றால் அதுதான் அரசியல் என்றும் அவர் கூறினார்.

“அவர்கள் ஒரு மேடையைக் கண்டனர், அதில் தாவி ஏறிக்கொண்டனர். தனது தோற்றத்தை மேம்படுத்திக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும்போது பிஎன் எப்படி தாவுகின்றதோ அதுபோன்றதுதான்”, என்று அவர் மேலும் கூறினார்.

ஏப்ரல் 28 பெர்சே பேரணிக்குப் பின்னர், பேரணியால் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்க கடைக்காரர்கள் அம்பிகாவின் வீட்டின்முன் பர்ஹர் கடைகளைப் போட்டனர்.

அதன் பின்னர், முன்னாள் இராணுவ படையினரில் சிலர் பிட்டத்தைக் காட்டும் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர். இப்போது இரவு சந்தை ஒன்று போடுவதற்கான முன்மொழிதலை பிரபல்ய வணிகரும் அம்னோ உறுப்பினருமான ஒருவர் செய்துள்ளார்.

நன்றி: ஃப்ரி மலேசியா டுடே