இண்ட்ராப் 2.0பேரணி மே 27-இல்

பக்காத்தான்-ஆதரவுத் தரப்புகள் ஒன்றுகூடி ஒரு மாபெரும் பேரணி நடத்தி அதில் இந்திய சமூகத்தை அலைக்கழிக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண ஓர் உருப்படியான திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க ஆயத்தமாகி வருகின்றன.

இண்ட்ராப் 2.0என்றழைக்கப்படும் அப்பேரணி ஞாயிற்றுக்கிழமை பிரிக்பீல்ட்ஸ் சாரணியர் மண்டபத்தில் பிற்பகல் மணி 3க்கு நடத்தப்படும் என்று பேரணி கூட்டு-ஏற்பாட்டாளர்களான மலேசிய இந்தியர் குரல்(எம்ஐவி) என்னும் அமைப்பு கூறியது.பேரணியில் சுமார் 10,000பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“இந்நாட்டில் இந்தியர்களின் நிலையில் பக்காத்தான் ரக்யாட் ஆட்சியிலும் சரி பிஎன் ஆட்சியிலும் சரி அதிக மாற்றமில்லை.இந்தியர்களுக்கென்று முறையான கொள்கைகள் வகுக்கப்படவில்லை”, என்று எம்ஐவி தலைவர் வி.ராயுடு கூறினார்.

இந்திய சமூகத்தின் துன்பம் தீர்க்கும் அரசாங்க அணுகுமுறைகளில் உருப்படியான மாற்றங்கள் இல்லை என்பதால், 2007-இல் நடத்தப்பட்ட ஹிண்ட்ராப் பேரணியின் தொடர்சியாக இப்படியோர் இயக்கம் நடத்துவது அவசியமாகிறது என்றார்.

இண்ட்ராப் இப்போது, பினாங்குத் துணை முதல்வர் (II) பி.இராமசாமி(இடம்), தேசிய இந்தியர் செயல் குழு(நியாட்) தலைவர் தஸ்லிம் முகம்மட் இப்ராகிம், முன்னாள் ஹிண்ட்ராப் தலைவர்கள் வி.கணபதி ராவ்,, ஆர்.கங்காதரன் ஆகியோர் தலைமையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

அழுத்தம் கொடுக்கும் முயற்சி

“ஒன்றுபட்ட பாதையில் புத்ரா ஜெயாவை நோக்கி” என்னும் தலைப்பைக் கொண்ட அவ்வியக்கம் இந்திய சமூகத்தைப் பாதிக்கும் விவகாரங்களுக்குத் தீர்வுகாண வேண்டும் என்று பிஎன்-பக்காத்தான் அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தைக் கொண்டது என ராயுடு கூறினார்.

“ஆண்டு தொடக்கத்தில் எல்லா முதலமைச்சர்களுக்கும் மந்திரி புசார்களுக்கும் மாநில அரசுகளில் பணிபுரியும் இந்தியர்களின் விகிதாசாரத்தை எழுதிக் கேட்டிருந்தோம்.

“இருவர் மட்டுமே பதில் அனுப்பினார்கள். ஜோகூரில் இரண்டு விழுக்காடு.நெகிரி செம்பிலானில் நான்கு விழுக்காடு. நான் அறிந்தவரை, 25ஆண்டுகளுக்குமுன் ஜோகூர் மாநில அரசுப் பணியாளர்களில் 17விழுக்காட்டினர் இந்தியர்களாக இருந்தனர்”, என்று தஸ்லிம் குறிப்பிட்டார்.

பினாங்கில் அரசுப் பணியில் இந்தியர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று பணிக்கப்பட்டது. ஆனால், எதுவும் நடக்கவில்லை.

“மலேசிய இந்தியர்கள், கடந்த 50 ஆண்டுகளாக திட்டமிடப்பட்டு ஒதுக்கப்பட்டும் ஓரங்கட்டப்பட்டும் வந்திருக்கிறார்கள்”, என்றவர் முறையிட்டார்.

இதன் தொடர்பில் 10-அம்சத் தீர்மானமொன்று உருவாக்கப்பட்டு மாற்றரசுக் கட்சி, அரசாங்கம் ஆகிய இரு தரப்பினரிடமும் சேர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.அதில் அடங்கியுள்ள கோரிக்கைகளாவன:

1) அடிப்படை உரிமைகள்

2) சமய சுதந்திரம்

3) கல்விபெறும் உரிமை

4) மெர்டேகாவுக்குப் பின்னர் பிறந்த இந்தியர்களுக்கு இயல்பாகவே குடியுரிமை வழங்கல்

5) இந்தியர்களுக்கும் புதிய பொருளாதாரக் கொள்கை போன்ற ஒன்று

6) வேலை வாய்ப்பில் சம உரிமை

7)வறுமையை ஒழிக்க பங்கீட்டு அட்டைமுறை(Ration card system)

8) எல்லாத் தமிழ்ப்பள்ளிகளையும் முழு உதவிபெறும் பள்ளிகளாக மாற்றுதல்

9) தனியார் துறைக்கு பணிஓய்வு ஊதியத் திட்டம்

10) சிறுபான்மையினர் பாதுகாப்புச் சட்டம் மற்றும் இன உறவுச் சட்டம்.

அந்நிகழ்வுக்கு, டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங்(வலம்), பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு (இடம்), பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் முதலிய பக்காத்தான் தலைவர்கள் அழைக்கப்பட்டிருப்பதாக ராயுடு தெரிவித்தார்.

இண்ட்ராபிலிருந்து பிரிந்துசென்று மனித உரிமைக் கட்சியை அமைத்துக்கொண்டிருக்கும் பி.உதயகுமார் பேரணிக்கு ஆதரவு கொடுப்பாரா என்று வினவியதற்கு, “எல்லோருக்கும் அழைப்பு அனுப்பியுள்ளோம்”, என்று சுருக்கமாக பதிலிறுத்தார் ராயுடு.