கூட்டத்தில் கலாட்டா,வன்செயல் சகாப்தத்தின் அறிகுறியோ: நூருல் கவலை

நேற்றிரவு தமது தொகுதியில் ஒரு நிகழ்வில் முட்டைகளும் கற்களும் வீசப்பட்ட சம்பவம், மலேசிய அரசியலில் ஒரு “அபாயமிக்க காலகட்டம்” தொடங்குவதன் அறிகுறியோ என்று லெம்பா பந்தாய் எம்பி நூருல் இஸ்ஸா அன்வாரை அச்சம் கொள்ள வைத்துள்ளது.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்றிரவு நிகழ்ந்ததுபோன்ற ஒரு “மோசமான” வன்செயலை இதற்குமுன் கண்டதில்லை என்றார்.பொதுத் தேர்தல் நெருங்க நெருங்க அது மேலும் பரவலாம் என்றும் அவர் கூறினார். 

“வன்செயல்களுக்கும் அச்சுறுத்தல் கலாச்சாரத்துக்கும் இடமளிக்கக்கூடாது.மக்கள் போலீசில் புகார் செய்வதற்குக்கூட அஞ்சுகிறார்கள்….(அச்சுறுத்துவோர்) அங்குதான் உள்ளனர்.

“பொதுத் தேர்தல் அருகில் வர வர நிலைமை மேலும் மோசமடையலாம்.”

பிரதமர் தெள்ளத் தெளிவாக இதைக் கண்டிக்க வேண்டும்.தவறினால் வன்செயல்களுக்கு அவர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று நுருல் கூறினார்.

கூட்டத்தில் நடந்த கலாட்டா போதாது என்று பந்தாய் டாலாமில் உள்ள தம் அலுவலகத்தின்மீதும் இரவு சுமார் 10மணிக்கு முட்டைகள் வீசப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

எம்பியின் பணியாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர்

நூருலின் அரசியல் செயலாளர் ஃபாஹ்மி பாட்சில், நேற்றிரவு சுமார் 9 மணிக்கு சிவப்பு உடை அணிந்த சுமார் 50பேர் தம்மைச் சூழ்ந்துகொண்டதாகக் கூறினார்.

“பந்தாய் பெர்மாய் அபார்ட்மெண்டுக்கு வெளியில் நின்றுகொண்டிருந்தபோது என்னை நோக்கிச் சத்தமிட்ட அவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்.

“நானும் பயந்துபோய் அபார்ட்மெண்ட் பகுதிக்குள் சென்றுவிட்டேன்…லெம்பா பந்தாய் பிகேஆர் அலுவலகப் பணியாளர்கள் நால்வருக்கும்கூட இதே மாதிரியான அனுபவம் ஏற்பட்டதாக அறிகிறேன்”, என்றார்.

பிகேஆர் தொகுதி தேர்தல் இயக்குனர் முகம்மட் ஜமான் முகம்மட் தாசி (இவர் லெம்பா பந்தாயில் குடியிருப்பவர்),அச்சுறுத்தியவர்களைத் தமக்குத் தெரியும் என்றும் அவர்கள் அந்த வட்டார அம்னோ உறுப்பினர்கள் என்றும் சொன்னார்.

இதனிடையே, பத்து எம்பி தியான் சுவா,  கோலாலம்பூரில் மற்ற இடங்களில் நடைபெற்ற மாற்றரசுக்கட்சி நிகழ்வுகளில்  வன்செயல்கள் நிகழ்ந்ததில்லை என்று கூறினார்.நேற்றிரவு லெம்பா பந்தாய் பக்காத்தான் கூட்டத்தில் கற்களும் முட்டைகளும் வீசப்பட்டபோது அவரும் அங்கிருந்தார்.

“லெம்பா பந்தாயில் மட்டும்தான் இது நடந்துள்ளது.இரண்டு வாரங்களுக்குமுன் பத்துவில், வங்சா மாஜுவில், சித்தியாவங்சாவில் கோலாலம்பூர் முழுக்க செராமா நடத்தினோம்.இப்படிப்பட்ட வன்செயல்கள் நிகழ்ந்ததில்லை. 

“ஒவ்வொரு முறையும் லெம்பா பந்தாய் வரும்போதும் போலீஸ் தொல்லை அல்லது குண்டர்களின் தொல்லையை எதிர்நோக்க வேண்டியுள்ளது.இது(லெம்பா பந்தாய் அம்னோ தலைவர்) ராஜா நொங் சிக்கின் இயலாமையையும் தலைமைத்துவத் தோல்வியையும்தான் காண்பிக்கிறது”, என்றாரவர்.