பிகேஆர் தலைமைச் செயலாளருக்கு எதிராக இசி துணைத் தலைவர் போலீசில் புகார்

தேர்தல் ஆணைய(இசி)த் துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார், தம்மை முன்னாள் அம்னோ உறுப்பினர் என்று கூறிய பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோனுக்கு எதிராக போலீசில் புகார் செய்துள்ளார்.

ஒரு மாதத்துக்குமுன் சைபுடின் அவ்வாறு கூறியது பொய்யென்று நிரூபிக்கப்பட்டிருப்பதால் அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வான் அஹ்மட் சினார் ஹரியான் மலாய் நாளேட்டிடம் தெரிவித்தார். 

“சைபுடின் எனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.அவர் சொன்னதில் உண்மையில்லை.தவற்றை ஒப்புக்கொண்டு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்”.

இதற்குமுன் வான் அஹ்மட், அம்னோவில் உறுப்பினராவதற்கு விண்ணப்பம் செய்ததாக தமக்கு நினைவில்லை என்றும் ஒருவேளை 1980-களில் நண்பர்களில் எவரேனும் தம் சார்பில் விண்ணப்பம் செய்திருக்கலாம் என்றும் கூறியிருந்தார்.

வான் அஹ்மட்டும் இசி தலைவர் அப்துல் அசீஸ் யூசுப்பும் இசி பதவியேற்ற பின்னரும்கூட அம்னோ உறுப்பியத்தை வைத்திருந்தனர் என்று சைபுடின் கூறியிருந்தார்.

அரசியலமைப்பு பிரிவு 114(2)-இன்படி  இசி தலைவராக பதவி வகிப்பவர் எந்தவோர் அமைப்பிலும் உறுப்பினராக இருத்தல் கூடாது, அப்படி இருந்தால் மூன்று மாதங்களுக்குள் உறுப்பியத்தை வெட்டிவிட வேண்டும் தவறினால் அவர் அப்பதவிக்குத் தகுதிபெற மாட்டார்.

பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீசும், இசி தலைவர் அப்துல் அசீஸ், 30 ஆண்டுகளுக்குமுன்பே அம்னோவிலிருந்து விலகி விட்டார் என்று கூறியிருந்தார்.  

இதனிடையே, சினார் ஹரியான், வான் அஹ்மட் கோலா புங்கோர் பாசிர் மாஸ் கிளையில் ஓர் உறுப்பினர் என்று சைபுடின் கூறியதை விசாரித்துப் பார்த்ததாகவும் விசாரித்ததில் அது உண்மை அல்ல  என்பது தெரிய வந்ததாகவும் கூறியது.அங்கு வான் அஹ்மட் என்ற பெயரில் ஒருவர் உறுப்பினராக இருக்கிறார்.ஆனால், அவர் ஓர் உணவக உரிமையாளர்.

TAGS: