பாஸ் இளைஞர்கள் என்எஸ்டி அலுவலகத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டம்

பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட்-டை ‘father of kafir’ எனக் கூறி வெளியிட்ட செய்திக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் பொருட்டு அந்தக் கட்சியின் இளைஞர் பிரிவு உறுப்பினர்கள் இன்று கோலாலம்பூர் பங்சாரில் அமைந்துள்ள என் எஸ்டி என்ற நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கைத் தலைமையகத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

என்எஸ்டி அந்தச் செய்தியை மீட்டுக் கொள்வதோடு அதற்காக மன்னிப்பும் கேட்க வேண்டும் என 70 பேர் கொண்ட பாஸ் இளைஞர் குழு கோரியது.

அந்தக் குழு பிற்பகல் 2 மணி வாக்கில் சைதினா அபு பாக்கார் அல் சிடிக் பள்ளிவாசலிலிருந்து ஊர்வலமாக ஜாலான் ரியோங்கில் உள்ள என்எஸ்டிபி கட்டிடத்துக்கு சென்றது.

அவர்கள் என்எஸ்டிக்கு எதிராக சுலோகங்களை முழங்கியதுடன் அதன் அலுவலகத்துக்கு வெளியில் அந்த நாளேட்டின் பிரதிகளையும் கிழித்து எறிந்தனர்.

அடுத்த ஒரு வாரத்துக்குள் தங்களது கோரிக்கைகளுக்கு என்எஸ்டி பதில் அளிக்காவிட்டால் அந்த நாளேட்டையும் அதன் மற்ற வெளியீடுகளையும் அந்த வெளியீடுகளில் விளம்பரம் செய்யப்படும் பொருட்களைப் புறக்கணிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப் போவதாக பாஸ் கூட்டரசுப் பிரதேச இளைஞர் பிரிவுத் தலைவர் கமருஸாமான் முகமட் மருட்டல் விடுத்தார்.

 

TAGS: