பக்காத்தான் ராக்யாட் ஆட்சிக்கு வந்தால் அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் விஷயங்களில் நாடற்ற இந்தியர்கள் பிரச்னை ஒன்றாக இருக்கும் என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று வாக்குறுதி அளித்துள்ளார்.
அவர் இன்று பிற்பகல் நடைபெற்ற இண்ட்ராப் 2.0 பேரணியில் பேசிய போது அந்த வாக்குறுதியை அளித்தார்.
இந்த நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் குடியுரிமையைப் பெறுவதற்கு கொண்டுள்ள ஆசை “சட்டப்பூர்வமான எதிர்பார்ப்பு” என அவர் சொன்னார்.
அந்த விஷயம் “தேசியைப் பிரச்னை” எனத் தாம் இதற்கு முன்னர் கிள்ளானில் கூறியதை அன்வார் இங்கும் எடுத்துரைத்தார்.
அதனைச் சமாளிப்பதற்கு அரசாங்கம் தனது நிர்வாக எந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றார் அவர்.
“நாங்கள் அதிகாரத்துக்கு வந்தால் சுங்கை சிப்புட்டில் உள்ள தோட்டங்களுக்குச் செல்லுமாறு நான் தேசியப் பதிவுத் துறையைக் கேட்டுக் கொள்வேன். மக்கள் உங்கள் அலுவலகத்துக்கு வருவதற்காகக் காத்திருக்க வேண்டாம் என்றும் கூறுவேன்,” என அவர் சொன்ன போது கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர்.