ஏப்ரல் 28 இல் நடத்தப்பட்ட பெரும் பேரணியால் சிறு கடைக்காரர்களுக்கு “மில்லியன்” கணக்கில் நட்டம் ஏற்பட்டது என்று இன்றிரவு நஜிப் பெர்சே 3.0 ஐ கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
எந்த இடத்தில் பெர்சே 3.0 பேரணி நடப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதோ அதே இடத்தில் நின்றுகொண்டு சுமார் 10,000 சிறு கடைக்காரர்களிடம் பேசிய நஜிப், பெர்சேயை பெயர் குறிப்பிடாமல், அவர்களுக்கு அளிக்கப்பட்ட மெர்தேக்கா அல்லது புக்கிட் ஜாலில் அரங்கத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இந்த நட்டத்தைத் தவிர்த்திருக்க முடியும் என்று கூறினார்.
“சிறு கடைக்காரர்களின் சோற்றில் மண்ணைப் போட்டது யார்? சிறுகடைக்காரர்களுக்கு துன்பம் ஏற்படுவது குறித்து அவர்கள் கவலைப்படவில்லை.
“மழை வந்துவிட்டால், கடைக்காரர்கள் அவர்களின் வியாபாரத்தை நடத்த முடியாது. மீ, காய்கறிகள் மற்றும் நூற்றுக்கணக்கான முட்டைகள் எல்லாம் வீணாகப் போய்விடுகின்றன.
“ஆனால், இதை இப்போது மக்கள் செய்கின்றனர், கடைக்காரர்கள் மில்லியன்கணக்கான ரிங்கிடை இழந்துள்ளனர்”, என்று இன்று மாலை டாத்தாரான் மெர்தேக்காவில் அங்கிருந்த கூட்டத்தினரிடம் அவர் கூறினார்.
இக்கூட்டத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். பிஎன் அரசாங்கம் அவர்களைத் தொடந்து தற்காக்கும் என்று அங்குள்ளவர்களின் ஆரவாரத்திற்கிடையே அவர் கூறினார்.
இன்றிரவு நடைபெறும் கூட்டம் ஒரு முன்மாதிரியான எடுத்துக்காட்டாகும். அது கடைக்காரர்கள் அமைதியாகவும் பண்பான முறையிலும் கூட முடியும் என்பதை நிரூபிக்கிறது என்று நஜிப் மேலும் கூறினார்.
“கடைக்காரர்கள் தெருவுக்குச் சென்று குழப்பத்தை ஏற்படுத்த நாம் விரும்பினால், நாம் கேட்கலாமா?”, என்று அவர் வினவியபோது கூட்டத்தினர் “ஆம்!” என்று உரக்கக் கூவினர்.
“ஆனால், கடைக்காரர்கள் சட்டத்தை மதிக்கின்றனர். நல்ல தோற்றத்தைக் காட்டுகின்றனர். அவர்கள் அமைதியையும் நல்லிணக்கத்தையும் விரும்புகின்றனர். நாம் இன்று அறிக்கை விடுவதற்காக மட்டுமின்றி கடைக்காரர்களின் வலிமையைக் காட்டுவதற்காகவும் அமைதியாகக் கூடியிருக்கிறோம்”, என்று நஜிப் மேலும் கூறினார்.