டிஏபி: வான் அகமட் வாக்காளர்களை அவமதிக்கிறார்

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் திருத்தப்பட வேண்டும் என மலேசியர்களில் 92 விழுக்காட்டினர் விரும்புவதாகக் கூறும் மெர்தேக்கா மய்ய ஆய்வு முடிவுகளை தேர்தல் ஆணையம் (இசி) நிராகரித்துள்ளது – அந்த அமைப்பு சுயேச்சையாக இயங்கவில்லை என்பதை மெய்பிப்பதாக டிஏபி கூறுகிறது.

அந்த ஆய்வு முடிவுகளை ‘அற்பமானவை’ என நிராகரித்து அதில் பதில் அளித்தவர்கள் உண்மையில் ஏதுமறியாதவர்கள் எனக் கூறியுள்ள இசி துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமாரை, டிஏபி-யின் தேசியப் பிரச்சாரப் பிரிவுச் செயலாளர் டோனி புவா சாடினார்.

“தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ள வாக்காளர்களை அந்த மெர்தேக்கா மய்யம் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சாலை ஒரங்களில் நடமாடும் ரெம்பிட்களை அல்ல என்றும் வான் அகமட் சொல்லியிருப்பது அந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களை அவமானப்படுத்துகிறது ,” என்றும் புவா சொன்னார்.

“மலேசியாவில் சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை நடத்த இசி விரும்பவில்லை என்பதையும் அதனுடைய ஆணவப் போக்குக் காட்டுகிறது. பொது மக்களுடைய கருத்துக்கள் எவ்வளவு தான் முரண்பாடாக இருந்தாலும் அது விட்டுக் கொடுக்காது என்பதையும் அது உணர்த்துகிறது,” என அந்த பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி தெரிவித்தார்.

ஏதும் அறியாதவர் வான் அகமட் தான் என்பதையும் அந்த ஆய்வில் பங்கு கொண்ட மலேசியர்கள் அல்ல என்பதையும் கருத்துக்கள் எடுத்துக்காட்டியுள்ளதாகவும் அவர் சொன்னார்.

“காரணம் அவர் உண்மையான ஆய்வை முதலில் படிக்காமல் அலட்சியமாக கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் உண்மையில் படித்திருந்தால் அந்த ஆய்வுக்கு பின்பற்றப்படும் வழிமுறைகளை புரிந்து கொண்டிருக்க முடியாது.”

“இனம், வயது, மாநிலம் ஆகிய அடிப்படையில்”மெர்தேக்கா மய்யம் ஆய்வை நடத்தியுள்ளது. அந்த நிலையில் 3.07 விழுக்காட்டு மட்டுமே தவறு ஏற்பட வாய்ப்புள்ளது.”

அந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோர் சட்டத்தை அறியாத, முதன் முறையாக வாக்களித்தவர் என வான் அகமட் வாதாடுவது பற்றிக் குறிப்பிட்ட புவா, பேட்டி காணப்பட்டவர்களில் 22 விழுக்காட்டினரே 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதை சுட்டிக் காட்டினார்.

ஆகவே ஆய்வுக்கு உட்பட்டவர்களில் பெரும்பான்மையினர் இது நாள் வரை குறைந்தது இரண்டு முறையாவது வாக்களித்திருக்க வேண்டும்.

“இந்த நாட்டில் தேர்தல் முறை முறைகேடுகளிலிருந்து விடுபட்டுள்ளது என 44 விழுக்காட்டினர் மட்டுமே நம்புவதற்கான காரணங்களை ஆய்வு செய்யவும் இசி மறுப்பது, அந்த ஆணையம் சம நிலையற்ற தேர்தல் முறையையும் பிரச்சார அரங்கத்தையும் உறுதி செய்வதிலும் அதன் வழி மலேசியர்களுடைய சரியான தேர்வைத் திருடுவதிலுமே அது அக்கறை கொண்டுள்ளதைக் காட்டுகிறது,” என்றும் புவா விடுத்த அறிக்கை குறிப்பிட்டது.

“இசி நியாயமான சுதந்திரமான தேர்தல்களை நடத்தும் என்பதில் மலேசியர்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. நமது தேர்தல் நடைமுறைகளை உருமாற்றம் செய்வதற்கு அம்னோ உறுப்பினர்களான இசி தலைவரும் துணைத் தலைவரும் பெரிய தடைக்கற்களாக இருந்து வருகின்றனர்.”

“செய்யப்படும் எந்த ‘சீர்திருத்தமும்’ மோசடி, ஏமாற்று வேலைகள் வழி அம்னோவும் பிஎன்- னும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்களை குறைக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அவர்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் ஒத்துழைத்து வருகின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.”

 

TAGS: