தேர்தலில் பக்காத்தான் பொது அடையாளச் சின்னத்தைப் பயன்படுத்த முடியாது

பக்காத்தான் ரக்யாட் ஒரு கூட்டணியாக சங்கப் பதிவதிகாரியால் இன்னமும்  ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதால் 13வது பொதுத் தேர்தலில் அது ஒரு பொதுவான அடையாளச் சின்னத்தைப் பயன்படுத்தவியலாது என்பதைத் தேர்தல் ஆணையம்(இசி) உறுதிப்படுத்துகிறது.

அதனால், குறிப்பிட்ட ஒரு தொகுதியில் அங்கு போட்டியிடும் கட்சியின் கொடிகளை மட்டுமே பறக்கவிடலாம்;பங்காளிக் கட்சிகளின் கொடிகளைப  பறக்கவிட முடியாது என்று  இசி துணைத் துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார்(இடம்) கூறினார். 

சீனமொழி நாளேடான் சின் சியு டெய்லிக்கு வழங்கிய நேர்காணலில் வான் அஹ்மட், தேர்தல் சட்டப்படி, போட்டியிடும் கட்சிகள் அவற்றின் சின்னங்களை மட்டுமே குறிப்பிட்ட தொகுதிகளில் காட்சிக்கு வைக்க முடியும் என்றார்.

இசி, அரசியல் கட்சிகளின் 32 அடையாளச் சின்னங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.இது, கடந்த பொதுத் தேர்தலில் அனுமதிக்கப்பட்ட அடையாளச் சின்னங்களைவிட 5கூடுதலாகும்.

இவற்றில் பார்டி சிந்தா மலேசியா, மக்கள் சக்திக் கட்சி, மலாயா சோசலிசக் கட்சி ஆகியவற்றின் அடையாளச் சின்னங்களும் அடங்கும்.

பக்காத்தான் அக் கூட்டணியின் பதிவு தொடர்பாக சங்கப் பதிவதிகாரி அப்துல் ரஹ்மான் ஒத்மானுடன் சச்சரவிட்டு வந்துள்ளது

பக்காத்தான் கூட்டணியைப் பதிவுசெய்ய ஜைட் இப்ராகிம் முயற்சி மேற்கொண்டார் என்றும் அவர் பிகேஆரிலிருந்து விலகியதும் பதிவுபண்ண பக்காத்தான் புதிய முயற்சி மேற்கொள்ளவில்லை எனவும் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

அதை மறுத்த பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன், கடந்த ஆண்டு மார்ச் மாதமே பக்காத்தான் புதிய விண்ணப்பம் ஒன்றை அனுப்பியதாகக் கூறினார்.

TAGS: