PKFZ மீது வழக்குரைஞர்கள் மகாதீரை விசாரித்தனர்

PKFZ என்ற போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி ஊழல் மீது  முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் லியாங் சிக் எதிர்நோக்கும் ஏமாற்றிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வழக்குரைஞர்கள் இன்று காலை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டை பேட்டி கண்டனர்.

கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கு மகாதீர் பேட்டி காணப்பட்டதாக அந்த வழக்குடன் தொடர்புடைய ஆனால் அடையாளம் தெரிவிக்க விரும்பாத ஒரு வட்டாரம் கூறியது.

2002ம் ஆண்டு கூட்டரசு அரசாங்கத்தை ஏமாற்றியதாகக் கூறும் குற்றச்சாட்டுக்குப் போதுமான ஆதாரம் இருப்பதை அரசுத் தரப்பு மெய்பித்துள்ளதால் லிங் எதிர்வாதம் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி அகமாடி அஸ்னாவி மார்ச் 8ம் தேதி ஆணையிட்டார்.

லிங்-கின் எதிர்வாதத்தைத் தயார் செய்வதற்கு சாத்தியமான சாட்சிகளாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், முன்னைய பிரதமர்களான மகாதீர், அப்துல்லா அகமட் படாவி ஆகியோரை லிங்-கின் வழக்குரைஞர் குழு பெயர் குறிப்பிட்டிருந்தது.

2002ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரையில் அமைச்சரவையில் இருந்த எட்டு நடப்பு முன்னாள் அமைச்சர்களும் பெயர் குறிப்பிடப்பட்டனர்.

அவர்களில் தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம், தோட்டத் தொழில், மூலப் பொருள் அமைச்சர் பெர்னார்ட் டொம்போக் ஆகியோரும் அடங்குவர்.

விசாரிக்கப்பட்ட நான்காவது அமைச்சர்

முன்னாள் மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில், முன்னாள் எரிசக்தி, தொலைத் தொடர்பு அமைச்சர் லியோ மோகி, முன்னாள் கல்வி அமைச்சர் மூசா முகமட், முன்னாள் சுற்றுப் பயண அமைச்சர் அப்துல் காதிர் ஷேக் பாட்சிர், முன்னாள் எரிசக்தி, நீர்வள, தொடர்பு அமைச்சர் டாக்டர் லிம் கெங் எய்க், முன்னாள் பிரதமர் துறை அமைச்சர் அப்துல் ஹமிட் ஜைனல் அபிடின் ஆகியோர் மற்றவர்கள் ஆவர்.

அந்தப் பட்டியலில் மகாதீருக்கு அப்போது சிறப்பு பொருளாதார ஆலோசகராக இருந்த அலி அபுல் ஹசான் சுலைமானும் இடம் பெற்றுள்ளார்.

அந்த கப்பல் போக்குவரத்து மய்யத்தை அமைப்பதற்கான நிலத்தின் கொள்முதல் விலைக்கு ஆண்டுக்கு 7.5 விழுக்காடு கூடுதலாக  வட்டி விதிக்கப்படுகிறது என்ற தகவலை அமைச்சரவையிடம் தெரிவிக்கத் தவறியதின் மூலம் அரசாங்கத்தை ஏமாற்றியதாக லிங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஒரு சதுர அடிக்கு 25 ரிங்கிட் என்ற அடிப்படையில் வட்டி விகிதம் உட்பட அந்த நிலத்தின் விலை 1,088,456,000 ரிங்கிட் என மதிப்பீட்டு, சொத்துச் சேவைத் துறை நிர்ணயம் செய்திருந்தது.

புலாவ் இண்டாவில் உள்ள அந்த 999.5 ஏக்கர் நிலம் மீது கூடுதல் வட்டியாக ஆண்டுக்கு 7.5 விழுக்காடு விதிக்கப்படுகிறது என்ற தகவலை அமைச்சரவைக்கு வேண்டுமென்றே தெரிவிக்கவில்லை என்றும் அந்தத் தகவலைத் தெரிவிக்காமல் ஏமாற்றினார் என்றும் கூறும் இரண்டு மாற்றுக் குற்றச்சாட்டுக்களையும் லிங் எதிர்நோக்கியுள்ளார்.

2002ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதிக்கும் நவம்பர் 6ம் தேதிக்கும் இடையில் புத்ராஜெயாவில் உள்ள பெர்டானா புத்ரா கட்டிடத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் நான்காவது மாடியில் அந்தக் குற்றங்கள் புரியப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

பிரதிவாதித் தரப்பு வழக்குரைஞர்கள் ஏற்கனவே மோகி, லிம், ஷாரிஸாட் ஆகியோரை பேட்டிக் கண்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

அந்த வழக்கு மீதான விசாரணை ஜுன் 18ம் தேதியிலிருந்து ஐந்து நாட்களுக்கு நடைபெறும். அதில் லிங் சாட்சியமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

TAGS: