50,000பேர் கூட்டத்தைத் திரட்டி பிரமிப்பை உண்டுபண்ணியது கெடா பாஸ்

அண்மையில் புக்கிட் ஜாலில் அரங்கில் அம்னோவின் 66வது ஆண்டுநிறைவுக் கொண்டாட்டத்தில் கூடிய பெருங்கூட்டத்துக்கு சவால் விடுவதுபோல் நேற்றிரவு ‘Himpunan Hijau ke Putrajaya’ என்னும் நிகழ்வில் 50,000பேரைத் திரட்டி பிரமிப்பை உண்டுபண்ணியது பாஸ் கட்சி.

13வது பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டதைப் போன்ற பூரிப்பை அக்கூட்டத்தாரிடம் காண முடிந்தது.

கூட்டம் நடைபெற்ற டாருல் அமான் அரங்கம் இரவு 9மணிக்கெல்லாம் நிறைந்துவிட்டது.கூட்டத்தினரில் பெரும்பாலோர் பச்சை நிற டி-சட்டைகளையும் பாஜு மலாயுவு, பாஜூ கூரோங்கும் அணிந்திருந்ததால் அரங்கம் பச்சைக் கடலெனக் காட்சியளித்தது. அரங்கில் 35ஆயிரம் பேருக்குத்தான் இடவசதி உண்டு என்பதால் அந்த அரங்கத்துக்கு வெளியிலும் மக்கள்கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது.

கூட்டத்தில் பாஸ் ஆன்மிகத் தலைவர் நிக் அப்துல் அசீஸ் நிக் மாட், கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், உதவித் தலைவர் மாபுஸ் ஒமார், கெடா பாஸ் ஆணையரும் மந்திரி புசாருமான அசிசான் அப்துல் ரசாக் முதலியோர் பேசினார்கள்.

.

பெர்சே இணைத்தலைவரும் தேசிய இலக்கியவாதியுமான ஏ.சமட் சைட் அதில் இளைஞர்களுக்காக ஒரு கவிதை படைத்தார்.

“இளைஞர்கள்தாம் புத்ரா ஜெயாவுக்கு அழைத்துச் செல்லப் போகிறார்கள்” என்று அவர் கூறியதைக் கேட்டுக் கூட்டத்தினர் குதித்துக் கொண்டாடினர்.

அக்கூட்டத்தில் முன்னாள் அம்னோ அமைச்சர் அப்துல் காடிர் ஷேக் பாதிரும் காணப்பட்டார்

கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஏற்பாட்டுக்குழுத் தலைவர் மாபுஸ், பொதுத் தேர்தலுக்குமுன் உறுப்பினர்களுக்கு ஊக்கமளிக்க இதுபோன்ற  கூட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்படும் என்றார்.

கூட்டத்தின் கருப்பொருளான ‘Himpunan Hijau ke Putrajaya’ பற்றி விளக்கிய அவர், நாட்டின் நிர்வாக மையத்தை நோக்கி பாஸ் மட்டும் தனித்து போகிறது என்பது அதன் பொருளல்ல என்றார்.

“இலக்கை அடைய கூட்டணிக் கட்சிகள் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும். அதற்கு பாஸ்  முடிந்த எல்லா வகையிலும் உதவும்.”

 

 

TAGS: