உள்துறை அமைச்சு அமைத்த பெர்சே 3.0 பேரணி விசாரணைக் குழுவிலிருந்து இரு உறுப்பினர்கள் விலகிக் கொண்டுள்ளனர்.
அந்தக் குழுவின் இரண்டாவது கூட்டத்துக்குப் பின்னர் அதன் தலைவர் முகமட் ஹனீப் ஒமார் அந்தத் தகவலை அறிவித்தார்.
முன்னாள் போர்னியோ தலைமை நீதிபதி ஸ்டீவ் சிம், பெட்ரோனஸ் நிறுவன விவகாரத் முதுநிலைத் தலைமை நிர்வாகி மேடான் அப்துல்லா ஆகியோரே அவர்கள்.
“சிம் உடல் நலக் காரணங்களுக்காக அந்த நியமனத்தை நிராகரித்துள்ளார். மேடானுக்கு கவனம் செலுத்துவதற்கு வேறு பல நடப்பு விஷயங்கள் உள்ளன,” என்று ஹனீப் புத்ராஜெயாவில் நிருபர்களிடம் கூறினார்.
அந்த இருவருக்கு பதிலாக புதியவர்களை அரசாங்கம் விரைவில் முடிவு செய்து அறிவிக்கும் என அவர் சொன்னார்.
சினார் ஹரியான் நிர்வாக ஆசிரியர் ஹுசாமுடின் யாக்குப், மீடியா சைனீஸ் இண்டர்நேசனல் (சின் சியூ குழுமம்) சட்ட ஆலோசகர் லியூ பெங் சுவான், மலேசியத் தேசியப் பல்கலைக்கழக மனோதத்துவப் பேராசிரியர் ருஸ்மி இஸ்மாயில் ஆகியோர் மற்ற உறுப்பினர்கள் ஆவர்.