“நஜிப் சரிப்பட்டு வரமாட்டார் என நினைக்கிறார் மகாதிர்”

டாக்டர் மகாதிர் முகம்மட், அப்துல்லா அஹமட் படாவிக்குச் செய்ததுபோலவே பதவியிலிருந்து இறங்குமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் அழுத்தம் கொடுத்து வருகிறார் என்று பாஸ் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார் கூறுகிறார்.

பிஎன் வேட்பாளர்களை முறையாக ஆய்வு செய்ய அடுத்த பொதுத்தேர்தலைத் தாமதப்படுத்துமாறு மகாதிர் நஜிப்புக்கு ஆலோசனை கூறியிருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.

“அம்னோவும் பிஎன்னும் வேட்பாளர்கள் தொடர்பில் சிக்கலை எதிர்நோக்குவதாக அல்லது கட்சியே பிரச்னையில் சிக்கிக்கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.. நஜிப்பிடம் அவரால் வெற்றிபெற இயலாது என்பதை மகாதிர் உணர்த்த முயல்கிறார்.” பாஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் மாபுஸ் இவ்வாறு கூறினார்.

“அரசாங்கத்துக்கும் அம்னோவுக்கும் பிஎன்னுக்கும் நஜிப் சரிப்பட்டுவர மாட்டார் என்று கருதப்படுகிறது. தேர்தலைத் தாமதப்படுத்த வேண்டும் என்பதே, அம்னோவுக்குள் நஜிப்பைப் பதவி விலகச் சொல்லி அழுத்தம் கொடுக்கப்படுவதை ஒப்புக்கொள்வதாகும்”, என்றாரவர்.

“நஜிப்பைக் கவிழ்க்க மகாதிர் பின்னணியிலிருந்து வேலை செய்வதுபோல் தெரிகிறது”, என்று கூறிய மாபுஸ், அப்துல்லா விசயத்தில் கையாண்ட அணுகுமுறைபோல் அல்லாது வேறுவகை அணுகுமுறை ஒன்றை அவர் கடைப்பிடித்து வருகிறார் என்றார்.

“அப்துல்லா விசயத்தில் அவருக்கு ஆதரவாக இருந்ததுபோல் இப்போதும் அவரைப் பின்பற்ற சில தரப்பினர் தயாராக இருப்பர்.”

மகாதிர், மார்ச் 8 தேர்தல் தோல்விக்காக அப்துல்லாவைத் தொடர்ந்து குறிவைத்துத் தாக்கிக்கொண்டிருந்தார்.அதற்காக அம்னோவைவிட்டே விலகிச் சென்ற அவர், அப்துல்லா பதவி விலகிய பின்னர்தான் மீண்டும் வந்து சேர்ந்தார்.

TAGS: