அம்னோவிடம் மன்னிப்பு கேட்க மறுத்தார் குவான் எங்

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், கடந்த மாதம் மாநில டிஏபி தலைமையகத்தை தீவைத்துக் கொளுத்த  முயன்றது அம்னோதான் என்று சந்தேகிப்பதாகக் கூறி அதன் பெயருக்குக் களங்கம் உண்டுபண்ணியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதை நிராகரித்தார்.

அது மட்டுமல்லாமல், ஜூலையில் கொம்டாரிலும் பினாங்கு பாலத்திலும் வன்செயல்மிக்க ஆர்ப்பாட்டங்களுக்கு அம்னோதான் ஏற்பாடு செய்தது என்று கூறியதற்காகவும் லிம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மாநில அம்னோ தொடர்புக்குழுத் தலைவர் சைனல் அபிடின் ஒஸ்மான் கூறினார்.

லிம், இன்று அம்னோவின் கோரிக்கைகளை வலியுறுத்தும் கடிதங்களை அம்னோ வழக்குரைஞர்களிடமிருந்து பெற்றார். அவை லிம் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பேசியதை மீட்டுக்கொள்ள வேண்டும் தவறினால் ரிம30மில்லியன் சிவில் அவதூறு வழக்கை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறின.

அதனால் மனம் கலங்காத லிம், அம்னோவை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும், “பொய்யே சொல்லும் கட்சியிடம்” மன்னிப்புக் கேட்கத் தயாராக இல்லை என்றும் கூறினார்.

“அம்னோ கோழையாகி விடாமல் நீதிமன்றத்தில் எங்களுக்காகக் காத்திருக்க வேண்டும். நாங்கள் சண்டை போட விரும்புகிறோம் அல்லது துணிச்சல்காரர்கள் என்பதற்காக இப்படிச் சொல்லவில்லை. உண்மை வெளிவர வேண்டும் என்பதற்காகவே இப்படிச் சொல்கிறேன்”, என்றாரவர்.

பினாங்கில் உள்ள டிஏபி அலுவலகத்தைத் தீவைத்துக் கொளுத்த முயன்ற சம்பவத்துக்கு அம்னோதான் பொறுப்பு என்று தாம் நேரடியாக குற்றம் சாட்டியதாகக் கூறப்படுவதை லிம் மறுத்தார்.

அதேபோல், கொம்டாரைச் சுற்றிலும் பினாங்கு பாலத்திலும் பல என்ஜிஓ-கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களைத் தான்  ஏற்பாடு செய்யவில்லை என்று அம்னோ மறுப்பதையும் அவர் நிராகரித்தார்.

“அங்கிருந்த செய்தியாளர்களைக் கேட்போம். படங்களைப் பாருங்கள். அம்னோ செனட்டர் இஸாம் முகம்மட் நோர், மாநில இளைஞர் துணைத் தலைவர் நோர்மான் டாஹ்லான் ஆகியோரை அடையாளம் காண முடிகிறதா, உங்களால்?”, என்று சில படங்களைக் காண்பித்தார்.

“அதனால் அம்னோவுக்கு அந்த ஆர்ப்பாட்டங்களில் தொடர்பில்லை என்று சொல்வது உண்மையல்ல”, என்றார்.

TAGS: