தொகுதி ஒதுக்கீடு:சர்ச்சையை நிறுத்த டிஏபி அறைகூவல்

பிகேஆரைப் போலவே டிஏபியும், பக்காத்தான் ரக்யாட்டின் தொகுதி ஒதுக்கீட்டு விவகாரம் தொடர்பில் கருத்துவேறுபாடுகளைப் பொதுவில் தெரிவிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தன் உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டிருகிறது.

ஜூலை 19-இல், பக்காத்தான் தலைவர்கள் செய்த முடிவை கட்சியில் அனைவரும் மதிக்க வேண்டும் என்று டிஏபி உதவித் தலைவர் டான் கொக் வாய் இன்று ஓர் அறிக்கையில் வலியுறுத்தினார்.

தொகுதி ஒதுக்கீடு தொடர்பான விவகாரங்களை உள்ளுக்குள்ளேயே பேசித் தீர்வுகாண வேண்டும் என்று பக்காத்தான் தலைமை முடிவு செய்திருப்பதாக அவர் கூறினார்.

”மாநில அளவில் உடன்பாடு காணமுடியாத விவகாரங்களுக்குத் தீர்வுகாணும் பொறுப்பைத் தேசிய தலைமையிடம் விட்டுவிட வேண்டும் என்பதை டிஏபி உறுப்பினர்களுக்கு நினைவுறுத்துகிறோம்”.

இதன் தொடர்பில் டிஏபி தலைவர்களும் உறுப்பினரும்  அறிக்கைகள் விடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார். அப்படிச் செய்வதை வைத்து, பக்காத்தான் கூட்டணியில் தொகுதிகளுக்குச் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்று கதைகட்டி விடுவார்கள் என்றாரவர்.

“பக்காத்தான் கூட்டணி உறுப்பினர் அனைவரும் இந்தக் கூட்டணி எவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதோ அந்த ஒற்றுமை உணர்வும் ஒத்துழைப்பும் நம்பிக்கையும் மேலோங்க பாடுபட வேண்டும்’, என்று டான் குறிப்பிட்டார்.

நேற்று மாலை பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலும் இதேபொன்றதொரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.அதில் ஜோகூர் பக்காதானில் நிலவும் சர்ச்சையை அவர் தனியே குறிப்பிட்டிருந்தார்.

“ஜோகூரிலும் மற்ற மாநிலங்களிலும் உள்ள பிகேஆர், பாஸ், டிஏபி தலைவர்கள் அனைவரும், பக்காத்தான் தலைமை மன்றம் வெளியிட்டுள்ள வழிகாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி பக்காத்தான் உணர்வுடன் ஒத்துழைக்கவும் ஒருவரை மற்றவர் மதிக்கவும் வேண்டும் என்று அறிவுறுத்துகிறேன்”, என்றவர் குறிப்பிட்டிருந்தார்.

ஜோகூரில், லேடாங், கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதி தொடர்பாக  டிஏபி தலைவர்களும் பிகேஆர் தலைவர்களும்  கடந்த சில நாள்களாக காரசாரமாக வாதிட்டுக் கொண்டிருந்தார்கள்.

TAGS: