பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துடிப்புமிக்க தலைமைத்துவமும் ஆதரவுக் கொள்கைகளும் மக்களுடைய உள்ளத்தைக் கவர்ந்து அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றிக்கு வழி கோலும் என முன்னாள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு கூறுகிறார்.
நஜிப் தமது உருமாற்றுக் கொள்கைகள், ஒரே மலேசியாக் கோட்பாடு ஆகியவை வழி வலியுறுத்தி வருகின்ற புதிய அரசியல் பாணி, நாட்டின் ஒற்றுமைக்கு ஒர் ஆதாரமாக நாட்டின் பல்வகைத் தன்மை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் எனக் கூறுவதாக அவர் சொன்னார். அது நஜிப் “அனைத்து சமூகங்களுக்குமான தலைவர்” என்பதை மெய்பித்துள்ளது.
சாமிவேலு பெர்னாமாவுக்கு வழங்கிய பேட்டியில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எல்லா சமூகங்களுடனும் நஜிப் தொடர்பு கொள்வதும் கலந்துரையாடல், அமைதியான சகவாழ்வு வழி மிதவாதத்தை அவர் வலியுறுத்துவதும் 2008ம் ஆண்டு பிஎன் -னை ஒதுக்கிய பலருடைய உள்ளத்தைக் கவர்ந்துள்ளது என்றார் அவர்.
“நான் அரசியலில் 30 ஆண்டுகளுக்கு மேல் இருந்துள்ளேன். இப்போது இந்திய சமூகம் என்ன நினைக்கிறது என்பது எனக்குத் தெரியும். தங்கள் மீது இவ்வளவு அனுதாபம் கொண்டுள்ள தலைவரை இந்தியர்கள் இது வரை பார்த்ததில்லை. தங்களது மனக்குறைகள் செவிமடுக்கப்பட்டுள்ளதால் இந்திய சமூகத்தில் பெரும்பான்மையினர் இப்போது பிஎன் -னை வலுவாக ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர்,” என்றார் சாமிவேலு. அவர் 1979ம் ஆண்டு தொடக்கம் 2008ம் ஆண்டு ஒய்வு பெறும் வரை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
செவி சாய்க்கவும் சாத்தியமான இடங்களில் நடவடிக்கை எடுக்கவும் தயாராக உள்ள பிரதமர் ஒருவரைப் பெற்றிருப்பது மீது இந்திய சமூகம் மகிழ்ச்சி கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெர்சே 3.0ல் இந்தியர்கள் குறைவாக இருந்தனர்
கடந்த காலத்தில் நிகழ்ந்த பெர்சே 1.0, பெர்சே 2.0 ஆர்ப்பாட்டங்களின் போது கணிசமான அளவு இந்தியர்கள் காணப்பட்டனர். ஆனால் பெர்சே 3.0 சில இந்தியர்களே தென்பட்டதை சாமிவேலு சுட்டிக் காட்டினார். “அரசாங்கம் தங்களது துயரங்களைக் கவனிக்கும் ஒர் அரசாங்கத்தை தாங்கள் பெற்றுள்ளதை அவர்கள் உணர்ந்துள்ளதே” அதற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“உங்களுக்கு செவி கொடுக்க தயாராக இருக்கும் ஒர் அரசாங்கம் இருக்கும் போது நீங்கள் சாலைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை,” என்றும் சாமிவேலு சொன்னார்.
இந்திய சமூகம் மட்டுமின்றி மலாய்க்காரர்கள், சீனர்கள், சீக்கியர்கள், ஒராங் அஸ்லிக்கள், இபான்கள், பிடாயூக்கள், கெலாபிட், கடாசான்கள் போன்ற சமூகங்களின் மீதும் நஜிப் நிர்வாகம் கடைப்பிடிக்கும் சிந்தனைகள் காரணமாக “அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மிக நல்ல வாய்ப்பை நஜிப் பெற்றுள்ளதாக” அமைச்சர் தகுதியுடன் இந்தியா, தெற்காசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதராக 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் நியமிக்கப்பட்ட சாமிவேலு தெரிவித்தார்.
பெர்னாமா