இசி: அடையாளக் கார்டு எண்கள் பிறந்த தேதியுடன் ஒத்துப் போகவில்லை என்றாலும் அது செல்லத்தக்கதே

மை கார்டு எண்களும் பிறந்த தேதியும் ஒத்துப் போகாத பல வாக்காளர்கள் சட்டப்பூர்வமானவர்களே என்று தேசியப் பதிவுத் துறை சொல்வதாக இசி என்னும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தவறு என அரசியல் ஆய்வாளர் ஒங் கியான் மிங் அம்பலப்படுத்தியுள்ள நான்கு வாக்காளர் பற்றிய விவரங்கள் தேசியப் பதிவுத் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதைப் போன்றதே என அடையாளம் தெரிவிக்க விரும்பாத ஆனால் அந்தப் பிரச்னையில் ஆணையத்தின் சார்பில் பேசுவதற்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரி ஒருவர் மலேசியாகினியிடம் சொன்னார்.

ஆகவே இசி-யின் பதிவுகள் திருத்தப்பட மாட்டாது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

வழக்கத்திற்கு மாறான தனிப்பட்ட விவரங்களைக் கொண்ட நான்கு வாக்காளர்களுடைய மை கார்டு எண்களை ஒங் இதற்கு முன்னர் வெளியிட்டிருந்தார்.

இசி-யின் இணைய புள்ளிவிவரக் களஞ்சியத்திலும் மலேசியாகினி மேற்கொண்ட சோதனையின் போது அந்த நான்கு வாக்காளர்களின் மை கார்டுகளில் உள்ள முதல் ஆறு இலக்கங்கள் அவர்களுடைய பிறந்த தேதிகளுடன் ஒத்துப் போகவில்லை என்பது தெரிய வந்தது.

மை கார்டில் உள்ள முதல் ஆறு இலக்கங்களும் அந்தக் கார்டுக்கு உரியவருடைய பிறந்த தேதியை ஆண்டு/மாதம்/தேதி-களைக் குறிக்கின்றன.

ஆனால் அந்தக் குளறுபடிக்கான காரணத்தை அந்த இசி அதிகாரி விளக்கவில்லை. மலேசியக் குடிமக்களுடைய அனைத்துத் தனிப்பட்ட தகவல்களையும் தேசியப் பதிவுத் துறை நிர்வாகம் செய்வதாக மட்டும் அவர் சொன்னார்.

தேசியப் பதிவுத் துறையில் பதிவாகியுள்ள விவரங்களுக்கு வாக்காளர் விவரங்கள் ஒத்துப் போகும் வரையில் அந்தப் பதிவை நிராகரிப்பதற்கோ அல்லது வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்கோ இசி-க்கு அதிகாரமில்லை என அதன் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப்-பும் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமாரும் ஏற்கனவே விளக்கியுள்ளனர்.

தேர்தல் சீர்திருத்தங்களுக்கு போராடும் பெர்சே-யின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் பற்றிய ஆதாரங்களையும் புள்ளி விவரங்களையும் வழங்கும் மெராப் என்ற மலேசிய வாக்காளர் பட்டியல் ஆய்வு திட்டத்தின் இயக்குநராகவும் ஒங் பணியாற்றி வருகிறார்.

TAGS: