மலேசிய இந்து சங்கம், பெர்லிஸ் மாநிலத்தில் ஓர் இந்திய மாணவி மதம் மாறியதில் அக்கல்லூரியின் பணியாளர்களும் மாநில இஸ்லாமிய விவகாரத் துறை (ஜயிப்) அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்று கூறப்படுவதைக் கண்டித்துள்ளது.
இந்து சங்கத் தலைவர் ஆர்.எஸ். மோகன் ஷண், நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில், மாணவர்களின் “அறிவாற்றலையும் திறன்களையும் மேம்படுத்துவதில் ஈடுபட வேண்டிய” மூன்று விரிவுரையாளர்கள் மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதை அறிந்து அதிர்ச்சி அடைவதாகக்க் குறிப்பிட்டிருந்தார்.
விரிவுரையாளர்களும் ஜயிப் அதிகாரிகளும் “விதிமுறைகளைப் பின்பற்றவில்லை” என்றாரவர். இதன் தொடர்பில் அவர்களை விசாரித்தபோது, “அப்படி விதிமுறைகள் இருப்பது தங்களுக்குத் தெரியாது” என்று அவர்கள் கூறியதாகவும் மோகன் தெரிவித்தார்.
“மலேசிய இந்து சங்கம் இதை ஒரு கடுமையான விவகாரமாகக் கருதுகிறது. இதை உயர்க்கல்வி அமைச்சர், பிரதமர் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு சென்று தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அது வலியுறுத்தும்”.
சிலாங்கூரில் சமயம் தொடர்பான ஒரு சர்ச்சை- சமூக நல அமைப்பான ஹராபான் கொம்முனிடி ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வில் முஸ்லிம்களை மதம் மாற்றும் நடவடிக்கை நடப்பதாகக் கேள்விப்பட்டு சிலாங்கூர் இஸ்லாமிய சமய விவகாரத் துறை(ஜயிஸ்) அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தப்போக அது ஒரு சர்ச்சையாக- உருவாகியுள்ள வேளையில் இப்போது பெர்லிஸில் இப்படி நிகழ்ந்துள்ளது.
ஒருபுறம் கிறிஸ்துவத்தைப் பரப்பும் முயற்சிகள், மலாய்க்காரர்களிடம் ஆத்திரத்தைத் தூண்டிவிடுவதாகக் கூறிக்கொண்டே இன்னொரு புறம் மலாய்க்காரர்-அல்லாதாரிடம் இஸ்லாத்தைப் பரப்பும் இஸ்லாமிய சமய அதிகாரிகளின் முயற்சிகளுக்கு அரசே ஆதரவாக இருக்கிறது என்று குறைகூறப்படுகிறது.
சமய அதிகாரிகள், வறுமையில் வாடும் இந்துக்களை அவர்களின் வறிய நிலையைச் “சாதகமாக்கிக் கொண்டு” இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்த சம்பவங்களையும் மோகன் ஷண் சுட்டிக்காண்பித்தார்.
மதம் மாறுவோர் மதமாற்றம் பற்றி முழுமையாக விவரம் அறியாதவர்கள், அது பற்றி அவர்களுக்கு விளக்கப்படுவதுமில்லை. தவறான பேச்சைக் கேட்டு மதமாற்ற ஆவணங்களில் கையெழுத்திட்டு விடுகிறார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் பற்றி இந்து சங்கத்துக்கு நிறைய புகார்கள் கிடைத்திருப்பதாக மோகன் கூறினார்.
“முறையாக தெரிந்துகொள்ளாமலும் சரியான வழிகாட்டுதலின்றியும் மதம் மாறும் இவர்களால் இவர்களுக்கு மட்டுமல்லாமல் இவர்களின் குடும்பத்தாருக்கும் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.”
மதமாற்றத்தில் வெளிப்படைத்தன்மை தேவை என்று வலியுறுத்திய மோகன் ஷண், ஒருவர் மதம்மாறும் முன்னர் அது பற்றி அவருக்கு நன்கு விளக்கப்பட வேண்டும், சரியான முறையில் வழிகாட்டப்பட வேண்டும், குடும்பத்தாரின் இசைவுடன் அதைச் செய்திட வேண்டும், குறிப்பாக குழந்தைகள், முதிர்ச்சி அடையாதவர்கள் விசயத்தில் இதைப் பின்பற்றுவது முக்கியம் என்றார்.