மக்கள் ஆதரவு இல்லையென்றால், கனிம நீர்(மினரல் வாட்டர்)புட்டிகள்கூட அரசாங்கத்தைக் கவிழ்த்துவிடும் என்று பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ் கூறினார்.
“உப்புத்தானே, கனிமநீர்தானே என்று குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள். எகிப்தில், தூனிசியாவில்,லிபியாவில் அரசாங்கங்களைக் கவிழ்த்தவை கைபேசிகள்….வெறும் கைபேசிகள்!
“அதனால் புட்டிகளைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்.மக்களின் ஆதரவு இல்லையேல் புட்டிகளாலும் ஒரு அரசாங்கம் கவிழும்”.மக்களவையில் லிம் கிட் சியாங்(டிஏபி-ஈப்போ பாராட்)கின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது நஸ்ரி இவ்வாறு கூறினார்.
பெர்சே 3.0பேரணியில் கலந்துகொண்டவர்கள் உப்பும் கனிமநீர் புட்டிகளும் மட்டுமே வைத்திருந்தார்கள் அப்படியிருக்க அதை அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சி என்று அரசு குற்றம்சாட்டியது ஏன் என்று லிம் கேட்டிருந்தார்.
“உப்பையும் கனிமநீரையும் கொண்டு அரசாங்கத்தைக் கவிழ்ப்பது சாத்தியமா?அவ்வளவு பலவீனமாகவா இருக்கிறது பிஎன் அரசு?”, என்று டிஏபி நாடாளுமன்றத் தலைவர் குத்தலாகக் கேட்டிருந்தார்.