நாடாளுமன்றத்தில் பாசிர் மாஸ் சுயேச்சை உறுப்பினரான இப்ராஹிம் அலியை ‘மோசடிக்காரர்’ என பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் வருணித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஒரிடத்தை பாஸ் கட்சியிடமிருந்து ‘திருடிய’ இப்ராஹிம் அலியின் சாதனையை நஸ்ரி மக்களவையில் பெரிதும் பாராட்டிப் பேசினார்.
“அவர் ஒரு மோசடிக்காரர், அவர் பாஸ் கட்சிக்கு ஒர் இடத்தை மோசடி செய்து விட்டார்,” என நஸ்ரி கேள்வி நேரத்தின் போது கூறினார்.
ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த தேர்தல் சீர்திருத்த ஆதரவு பெர்சே 3.0 பேரணியை இப்ராஹிம் குறை கூறியதை ஒப்புக் கொண்ட பின்னர் நஸ்ரி அவ்வாறு தெரிவித்தார்.
நஸ்ரியின் அறிக்கை பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியது. மக்களிடம் பொய் பேசிய ‘மோசடிக்காரர்’ இப்ராஹிம் என அமைச்சர் சொன்னால் அவர்கள் அந்த பாசிர் மாஸ் எம்பி சொல்கின்ற மற்ற விஷயங்களுக்கும் செவி சாய்க்கக் கூடாது என பாஸ் ஷா அலாம் உறுப்பினர் காலித் சமாட் கூறினார்.
இப்ராஹிம் மக்களை ஏமாற்றியதாக நான் சொல்லவில்லை என நஸ்ரி அதற்குப் பதில் அளித்தார்.
“அவரை மக்கள் தேர்வு செய்துள்ளனர். ஆனால் அவர் பாஸ் கட்சியை ஏமாற்றியுள்ளார்,” என அந்த பாடாங் ரெங்காஸ் எம்பி விளக்கமளித்தார்.
அதனைத் தொடர்ந்து இடைமறித்துப் பேசிய இப்ராஹிம்,” தாம் ‘தந்திரக்காரர்’, மோசடிக்காரர் அல்ல எனத் தெரிவித்தார். அதற்கு பாஸ் ஏக்காளமிட்டு சிரித்தனர்.
2008 பொதுத் தேர்தலில் பாசிர் மாஸ் தொகுதியில் பாஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் பின்னர் அந்தக் கட்சியிலிருந்து விலகி சுயேச்சை உறுப்பினரானார்.
என்றாலும் அவர் அடுத்து தமது நிறத்தை மாற்றிக் கொண்டு தம்மை பிஎன் நட்புறவு சுயேச்சை உறுப்பினர் என அறிவித்தார்.
அந்த சுயேச்சை உறுப்பினருக்கும் பாஸ் உறுப்பினர்களுக்கும் இடையில் எல்லா நிலைகளிலும் பகைமை காணப்படுகிறது. அதனையே நஸ்ரி இன்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.