மகாதீர்: புத்ராஜெயாவை பக்காத்தான் எடுத்துக் கொள்வது குறித்து நான் அஞ்சவில்லை

இந்த நாட்டில் அதிகாரத்தை பக்காத்தான் ராக்யாட் எடுத்துக் கொள்வது பற்றித் தாம் அஞ்சவில்லை என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். போலியான குற்றச்சாட்டுக்களின் பேரில் தாம் ஜெயிலில் அடைக்கப்படலாம் என்பதைத் தவிர வேறு எதற்கும் தாம் பயப்படவில்லை என்றார் அவர்.

தமது தவறான செயல்கள் அம்பலப்படுத்தப்பட்டு விடும் என்ற அச்சத்தினால் எதிர்க்கட்சிகள் அதிகாரத்தைக் கைப்பற்றாமல் தடுப்பதற்கு மகாதீர் கடுமையாக முயற்சி செய்து வருகிறார் என டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் கூறியுள்ளதற்கு தமது வலைப்பதிவின் மூலம் பதில் அளித்த மகாதீர் அவ்வாறு கூறியிருக்கிறார்.

“அவர் சொல்வது சரி தான். நான் அஞ்சுகிறேன்.”

“உம்மி ஹபில்டா அலி எனக்கு எழுதிய கடிதத்தை மீட்டுக் கொள்ளுமாறு செய்வதற்காக டாக்டர் ரிஸ்டினா மஜிட்-டையும் உம்மியையும் மருட்டுவதற்கு முதுநிலை போலீஸ் அதிகாரி ஒருவரைப் பக்காத்தானின் பெருந்தலைவர்களில் ஒருவர் பயன்படுத்தியிருப்பதின் மூலம் அதிகார அத்துமீறல் எப்படி இருக்கும் என ஏற்கனவே காட்டப்பட்டிருப்பதால் நான் அஞ்சுகிறேன்,” என மகாதீர் வலைப்பதிவில் எழுதியுள்ளார்.

1990ம் ஆண்டுகளின் இறுதியில் நடைபெற்ற குதப்புணர்ச்சி வழக்கு 1, அதிகார அத்துமீறல் வழக்கு விசாரணையில் தமக்கு எதிராக சாட்சியமளித்த இரண்டு சாட்சிகளை மிரட்டுமாறு போலீசாருக்கு அப்போதைய துணைப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆணையிட்டதாக மகாதீரை மேற்கோள் காட்டிமே 31ம் தேது அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டிருந்தது.

“அதைத் தவிர நான் வேறு எதற்கும் அஞ்சவில்லை. நான் ஏதாவது ஒரு கட்டத்தில் பதவி விலக வேண்டியிருக்கும், அதிகாரத்தை இழக்க வேண்டியிருக்கும் என்பதை அறிந்துள்ளதால் பிரதமர் என்ற முறையில் எனக்கு இருந்த அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதில் நான் மிகவும் கவனமாக இருந்தேன்.”

“நான் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருந்தால் என்னுடைய எதிராளிகள் சந்தோஷமாக என்னை அம்பலப்படுத்தி கம்பிகளுக்கு பின்னால் என்னை அடைப்பதற்கு முயற்சி செய்திருப்பார்கள்,” என மகாதீர் தொடர்ந்து சொன்னார்.

TAGS: