முன்னைய பிஎன் பினாங்கு அரசாங்கம் 2008ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்னதாக 250 அடி (76.2 மீட்டர்) உயரத்துக்கு மேல் 37 திட்டங்களை அங்கீகரித்துள்ளதாக MPPP எனப்படும் பினாங்குத் தீவு நகராட்சி மன்றம் தகவல் வெளியிட்டுள்ளது.
அந்தத் திட்டங்களுக்கு தேவையான அனுமதிகள் 1985ம் ஆண்டு தொடக்கம் மார்ச் 2008 வரையில் பெறப்பட்டுள்ளதாக அந்த நகராட்சி மன்றத்தின் தலைவர் பட்டாஹியா இஸ்மாயில் கூறினார்.
அந்த திட்டங்களில் பல முடிக்கப்பட்டு விட்டன அல்லது மேம்பாட்டுப் பணிகள் தொடங்கி விட்டன என்றும் அந்தத் திட்டங்கள் மீது இப்போது எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் சொன்னார்.
“என்றாலும் இன்னும் தொடங்கப்படாத திட்டங்கள் முதலமைச்சர் லிம் குவான் எங் தலைமை ஏற்றுள்ள மாநிலத் திட்டக் குழுவுக்கு அனுப்பப்படும்,” என அவர் இன்று பினாங்கில் நிருபர்களிடம் கூறினார்.
அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் (76.2 மீட்டர் உயரத்திற்கு மேலான இடங்களில்) ஒர் ஆண்டுக்கு செல்லத்தக்கவை. மேம்பாட்டாளர்கள் உண்மையான கட்டுமான வேலைகளைத் தொடங்குவதற்கு முன்னர் அவற்றை ஐந்து ஆண்டுகள் வரையில் ஆண்டுதோறும் புதுப்பிக்க முடியும் என்றும் பட்டாஹியா தெரிவித்தார்.
“பொது மக்களைப் பொறுத்த வரையில் நாங்கள் அந்தத் திட்டங்களை அங்கீகரிப்பதாகத் தோன்றும். ஆனால் அவை வெறும் புதுப்பிப்பு நடவடிக்கைகள் மட்டுமே. நடப்பு நிர்வாகத்தின் கீழ் புதிய அங்கீகாரம் ஏதும் கொடுக்கப்படவில்லை,” என்றார் அவர்.
2007ம் ஆண்டு மாநில அடிப்படை வடிவமைப்புத் திட்டத்தின் கீழ் ஏப்ரல் 2008க்கும் இவ்வாண்டு மே மாதத்திற்கும் இடையில் 250 அடி உயரத்துக்கு மேலான 19 திட்டங்கள் சிறப்புத் திட்டங்கள் என்ற அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்டதாகவும் பட்டாஹியா குறிப்பிட்டார்.
அந்தத் திட்டங்கள் அனைத்தும் 1996ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதியிடப்பட்ட பினாங்குத் தீவு நகராட்சி மன்றத்தின் மேம்பாட்டு கட்டுப்பாட்டு, கொள்கை திட்டத்தின் அடிப்படையில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டவை என்றும் அவர் சொன்னார்.
“2002ம் ஆண்டு கூட்டரசு அரசாங்கத்தில் இயங்கும் பொருளாதாரத் திட்டப் பிரிவு, கடல் மட்டத்துக்கு 150 மீட்டர் உயரத்துக்கு மேல் உள்ள நிலமே மலை என்று வரையறுத்துள்ளது,” என்றும் பட்டாஹியா தெரிவித்தார்.