இசி:வெளிநாட்டில் உள்ள மலேசியர்களின் ஆதரவு திருப்தி அளிக்கவில்லை

வெளிநாடுகளில் வசிக்கும் மில்லியனுக்கு மேற்பட்ட மலேசியர்களை வாக்காளர்களாக பதிவுசெய்துகொள்ளும்படி எவ்வளவோ கேட்டுக்கொண்டாலும்கூட அதற்குப் போதுமான வரவேற்பு இல்லை என்கிறார் தேர்தல் ஆணைய(இசி) தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப்.

“வெளிநாடுகளில் வசிப்பவர்களை அவரவர் வசிக்கும் நாடுகளில் உள்ள தூதரகங்களில் பதிவுசெய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.

“ஆனால், அதற்கு வரவேற்பு நன்றாக இல்லை, திருப்திகரமாக இல்லை.நான்கு மாதங்களுக்குமுன் அதை அறிவித்தோம்.இதுவரை 400-இலிருந்து 500பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர்”, என்று அப்துல் அசீஸ் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

இப்போதைக்கு 2002தேர்தல் விதிமுறைகளின்படி வெளிநாடுகளில் உள்ள அரசுப்பணியாளர்கள், இராணுவ அதிகாரிகள், முழுநேர மாணவர்கள் மட்டுமே அஞ்சல்வழி வாக்காளர்களாகப் பதிவு செய்துகொள்ள முடியும்.

“ஆனால், இந்த வகையில் தகுதிபெறுவோர்கூட அஞ்சல்வழி வாக்காளர்களாக தங்களைப் பதிவுசெய்துகொள்ள பெரும் எண்ணிக்கையில் முன்வரவில்லை”, என்று அப்துல் அசீஸ் வருத்தப்பட்டுக் கொண்டார்.

வெளிநாடுகள் வசிக்கும் மலேசியர்கள் அனைவருக்குமே வாக்களிக்கும் உரிமை கிடைக்க வேண்டும் என்பது தேர்தல் சீரமைப்புமீதான நாடாளுமன்றத் தேர்வுக்குழு(பிஎஸ்சி)வின் 22 பரிந்துரைகளில் ஒன்றாகும்.

இசி-யைப் பொருத்தவரை வெளிநாடுகளில் வாழும் எல்லா மலேசியர்களையும் அஞ்சல்வழி வாக்காளர்களாக வகைப்படுத்த மறுத்தது.அத்துடன், அவர்கள் முன்கூட்டியே வாக்களிப்பதற்கும் அது இடமளிக்க விரும்பவில்லை.

அவ்வாறு செய்ய அது ஒரு நிபந்தனை விதித்தது.வெளிநாடுகளில் உள்ளவர்கள் வாக்காளர்களாக பதிவுசெய்துகொள்ள வேண்டும்,அத்துடன் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையாவது நாட்டுக்குத் திரும்பி வர வேண்டும் அப்போதுதான் அவர்களுக்கு அஞ்சல்வழி வாக்களிக்கும் உரிமை வழங்க முடியும் என்று அது கூறியது.

என்றாலும், வெளிநாடுகளில் உள்ள தகுதிபெற்ற மலேசியர்களை வாக்காளர்களாக்கும் நடைமுறைகள் பற்றிய அறிக்கை ஒன்று “கிட்டத்தட்ட முழுமை பெற்றுவிட்டதாக” அப்துல் அசீஸ் மலேசியாகினியிடம் தெரிவித்தார். அவ்வறிக்கை நாடாளுமன்ற விவகாரங்களைக் கவனித்துக்கொள்ளும் பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரியிடம் வழங்கப்படும் என்றாரவர்.

வெளியூர்களில் உள்ள வாக்காளர்கள், குறிப்பாக தீவகற்பத்தில் வசிக்கும் சாபா, சரவாக் வாக்காளர்கள், வாக்களிக்கத் தங்கள் தொகுதிகளுக்குத் திரும்பிச் செல்லாமல், இருக்கும் இடத்திலிருந்தே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று அனைத்துக்கட்சிக் குழு ஒன்று கடந்த நவம்பரில் அறிக்கை வெளியிட்டது பற்றியும் அப்துல் அசீசிடம் வினவியதற்கு அது சாத்தியப்படாது என்றார்.

“சட்டத்தில் அவ்வாறு செய்ய இடமில்லை.சாபா, சரவாக் விசயத்தில் அதற்கு இடமளித்தால் கோலாலம்பூரைச் சேர்ந்தவர்கள் ஜோகூரில் அல்லது பெர்லிசில் அல்லது சாபாவில் இருப்பார்கள் அவர்களுக்கு என்ன செய்வது?”, என்றவர் திருப்பிக் கேட்டார்.

குறிப்பிட்ட சில வாக்காளர்களுக்கு இப்படிச் “சிறப்பு”ச் சலுகை கொடுக்கவியலாது.அரசமைப்பு பகுதி 119 ஒரு வாக்காளர் அவரது தொகுதியில் இருந்துகொண்டுதான் வாக்களிக்க வேண்டும் என்று கூறுவதை அவர் சுட்டினார்.

“மூன்று மாதங்களுக்குமேல் கோலாலம்பூரில் வேலை செய்துகொண்டிருந்தால், உங்கள் முகவரியை மாற்றிக்கொண்டு அதை இசி-க்கும் தெரிவிக்க வேண்டும். அதுதான் சட்டம்”, என்றார்.

TAGS: