பொதுத் தேர்தல்கள் கூடிய விரைவில் நடத்தப்பட வேண்டும் என தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள சமூகம் விரும்புகிறது.
நீண்ட காலமாக நிச்சயமற்ற சூழ்நிலையை அந்தத் தொழில் துறை எதிர்நோக்குவதே அதற்குக் காரணம் என மலேசியத் தயாரிப்பாளர்கள் சம்மேளனத் தலைவர் யோங் போ கோன் கூறினார்.
தேர்தல்கள் விரைவாக நடத்தி முடிக்கப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். காரணம் உறுதியற்ற சூழ்நிலை தொடருகிறது. தேர்தல்கள் முடிந்தால் முடிவுகள் எடுப்பது எளிதாக இருக்கும்,” என்றார் அவர்.
அடுத்த பொதுத் தேர்தலுக்கான தேதி குறித்த ஆரூடங்கள் பல மாதங்களாகவே கூறப்பட்டு வருகின்றன.
பிரதமர் தேர்தல் தேதி பற்றி தொடர்ந்து ஆழ்ந்த மௌனம் அனுசரித்து வருகிறார்.
இந்த மாதம் நிகழும் என எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் செப்டம்பர் வரையில் தள்ளி வைக்கப்படலாம் என அரசியல் ஆய்வாளர்கள் எண்ணுகின்றனர்.
Bantuan Rakyat 1Malaysia (BR1M) என்ற ஒரே மலேசியா மக்கள் உதவித் தொகையை இரண்டாவது முறையாக வழங்குவது பற்றியும் அரசாங்கம் யோசித்து வருவதாகச் சொல்லப்படுகின்றது.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், 2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை செப்டம்பர் மாதம் தாக்கல் செய்கிறார். தேர்தலில் வாக்காளர்களைக் கவருவதற்கான நடவடிக்கைகளை அவர் அப்போது அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியத் தயாரிப்பாளர் சம்மேளனம் கடந்த மாதம் நடத்திய வர்த்தகச் சூழ்நிலைகள் மீதான அரையாண்டு ஆய்வு முடிவுகளை சமர்பித்த பின்னர் யோங் அவ்வாறு கூறினார்.
நாடு முழுவதும் 368 வர்த்தக நிறுவனங்களிடம் அந்த ஆய்வு நடத்தப்பட்டது. தேர்தல் தேதி நிச்சயமாகத் தெரியவில்லை என்ற போதிலும் ஐரோப்பிய சந்தையில் மந்த நிலை ஏற்படும் என ஆரூடம் கூறப்பட்டுள்ள போதிலும் அடுத்த ஆறு மாதங்களுக்கு வர்த்தக சூழ்நிலை நன்றாக இருக்கும் அவை கருதுவது அந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

























