சில வாக்காளர்கள் ஒரே ஏழு இலக்க அடையாளக் கார்டு எண்களைப் பகிர்ந்து கொண்டுள்ளதை தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது. என்றாலும் வாக்காளர் பட்டியலின் நேர்மையை அவை பாதிக்காது.
இவ்வாறு இசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் கூறினார். சில வாக்காளர்கள் ‘மறு சுழற்சி’ செய்யப்பட்ட அடையாளக் கார்டு எண்களைக் கொண்டுள்ளதாக மெராப் என்ற மலேசிய வாக்காளர் பட்டியல் ஆய்வுத் திட்டம் கூறியுள்ளதற்கு அவர் பதில் அளித்தார்.
அதற்கு மனிதத் தவறு காரணம் என்றும் அப்துல் அஜிஸ் சொன்னார்.
1990ம் ஆண்டுகளுக்கு முன்னதாக ஏழு இலக்க அடையாளக் கார்டு எண்கள் வழங்கப்பட்ட போது கணினி தொழில்நுட்பம் கிடையாது. அதனால் சிலர் ஒரே அடையாளக் கார்டு எண்களைப் பகிர்ந்து கொண்டனர்.
“ஒரே பழைய அடையாளக் கார்டு எண்களைக் கொண்ட பல வாக்காளர்கள் இருப்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். ஆனால் அவர்கள் வெவ்வேறு மனிதர்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்க புதிய அடையாளக் கார்டு எண்கள் கொடுக்கப்பட்டு விட்டன.”
“கடந்த காலத்தில் பழைய அடையாளக் கார்டுகள் வெளியிடப்பட்ட போது நம்மிடம் சிறந்த தொலைத் தொடர்பு வசதிகளும் கணினி இணைப்புக்களும் கிடையாது. மலேசியா முழுவதும் உள்ள எல்லா மாவட்டங்களிலும் எல்லா கையால் செய்யப்பட்டன.”
“ஆகவே வெவ்வேறு மனிதர்களுக்கு ஒரே அடையாளக் கார்டு எண்கள் கொடுக்கப்பட்டிருக்கக் கூடிய சாத்தியம் இருந்தது,” என அப்துல் அஜிஸ் இன்று மலேசியாகினியிடம் விளக்கினார்.
12 இலக்கங்களைக் கொண்ட நடப்பு தேசியப் பதிவு அடையாளக் கார்டு எண் முறை அல்லது மை கார்டு முறை 1990களின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அது ஏழு இலக்கங்களைக் கொண்ட பழைய அடையாளக் கார்டுகளுக்கு பதிலாக வழங்கப்பட்டது.
அடையாளக் கார்டுகளை வழங்கும் நடவடிக்கையை தேசியப் பதிவுத் துறை மேற்கொண்டு வருகிறது.