சீரமைப்புகள்: நஜிப் பக்காத்தானைப் பின்பற்ற வேண்டும்

இன்றிரவு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பல்வேறு சீரமைப்புகளை அறிவிப்பார் என்று சொல்லப்படுகின்ற வேளையில் அவர் சீரமைப்பில் உண்மையிலேயே அக்கறை கொண்டவராக இருந்தால் தங்களை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று பக்காத்தான் எம்பிகள் கூறுகின்றனர்.

“மலேசிய மக்களுக்குப் பயனான மாற்றங்களைச் செய்ய பிரதமர் விரும்பினால் அவர் எங்கள் பரிந்துரைகளைப் பின்பற்ற வேண்டும்”, என்று சுபாங் எம்பி ஆர்.சிவராசா கூறினார்.

அவர்,இன்று பெட்டாலிங் ஜெயாவில் பக்காத்தான் பட்ஜெட் தயாரிப்புக்குழுக் கூட்டத்தில் பேசினார்.

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம், அவசரகாலச் சட்டம், பயங்கரப் போதைப்பொருள் சட்டம் போன்ற தடுப்புக்காவல் சட்டங்களை முற்றாக அகற்றுவதுதான் பயன்மிக்க சீரமைப்பாக இருக்கும் என்று சிவராசா வலியுறுத்தினார்.

ஊடகச் சட்டங்களில் பிரதமர் திருத்தங்கள் செய்ய எண்ணினால், ஊடகங்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் அரச நிந்தனைச் சட்டம், அதிகாரத்துவ இரகசிய காப்புச் சட்டம் போன்றனவற்றைக் கைவிட வேண்டும்.

அச்சக, வெளியீட்டகச் சட்டத்தின் சில பகுதிகள் இன்னமும்கூட அவசியமானவையாக இருக்கலாம். ஆனால், ஆண்டுதோறும்  வெளியீட்டக உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்றிருப்பதை விட்டொழிக்க வேண்டும். அது, ஊடகங்கள் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கு உள்துறை அமைச்சரின் தயவை எதிர்பார்த்திருக்க வேண்டிய ஒரு கட்டாயத்தை உருவாக்கி விடுகின்றன.

செய்தியாளர் கூட்டத்தில் சிவராசாவுடன் சேர்ந்துகொண்ட பாஸ் கோலா சிலாங்கூர் எம்பி சுல்கிப்ளி அஹ்மட், நிதி அமைச்சர் என்ற முறையில் நஜிப்பின் செயல்பாடுகள் ஏமாற்றமளிப்பதாகக் குறிப்பிட்டார்.

பிரதமரே நிதி அமைச்சராகவும் செயல்படுவது சரிப்படாது, முழுநேர நிதி அமைச்சர் தேவை என்றார்.

“பிரதமர் பொறுப்பே பளுமிக்கது. இதில் நிதி அமைச்சையும் கவனித்துக்கொள்வது சிரமமாக இருக்கும்”, என்று சுல்கிப்ளி கூறினார்.

பிஎன் அதன் பட்ஜெட்டை  அக்டோபர் 4-இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு மூன்று நாள்களுக்கு முன்னதாக பக்காத்தான் அதன் மாற்று பட்ஜெட்டை அறிவிக்கும் என்றும் அந்த கோலா சிலாங்கூர் எம்பி கூறினார்.

மாற்று பட்ஜெட்  எண்ணெய் உற்பத்தி செய்யும் மாநிலங்கள் அனைத்துக்கும் 20விழுக்காடு உரிமத் தொகை வழங்க உத்தரவாதம் அளிக்கிறது. அத்துடன் பக்காத்தான் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றினால், பதவியேற்ற 100 நாள்களில் அதன் புக்கு ஜிங்காவில் குறிப்பிடப்பட்டிருக்கும் மாற்றங்கள் எல்லாமே நடைமுறைப்படுத்தப்படும்.

புக்கிட் பெண்டேரா எம்பியான லியு சின் தோங், மாற்று பட்ஜெட், பிரதமர் துறையின் அதிகாரத்தைக் குறைத்து மற்ற அமைச்சுகளின் ஆற்றலைப் பெருக்குவதற்கான வழிமுறைகளையும் விவரிக்கும் என்றார்.

மலேசியாவுக்குத் தங்களால் எப்படி சிறந்த சேவையைச் செய்ய முடியும் என்பதைக் காண்பிக்க பக்காத்தான் ஆண்டுதோறும் மாற்று பட்ஜெட் ஒன்றைத் தயாரித்து வருகிறது.

TAGS: