“நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கைக் காட்டுவதற்குத் தயாராக இல்லை என்றால் அவ்வாறு செய்யுமாறு மற்றவர்களைக் கேட்டுக் கொள்ள வேண்டாம். அதனால் உங்களை நீங்களே முட்டாளாக்கிக் கொள்கின்றீர்கள்”
முஹைடின்: நான் அன்வாரிடம் என் கணக்குகளைக் காட்ட மாட்டேன்.
ஜனநாயகம்53: துணைப் பிரதமர் முஹைடின் யாசின் அவர்களே மலேசியாவில் பணக்கார மாநிலங்களில் ஒன்றைச் சேர்ந்த பணக்கார மந்திரி புசார் என நீங்கள் எப்போதும் பேசப்பட்டு வந்துள்ளீர்கள். நீங்கள் உண்மையில் ஜோகூரையும் ஜோகூர் பாருவையும் விற்று விட்டீர்கள். தற்போது கண்ணுக்கு வெறுப்பைத் தரும் ஜோகூர் நீரிணையில் நடத்தப்பட்ட கட்டுமானம் தான் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டை விழித்துக் கொள்ளச் செய்தது.
அந்தத் திட்டத்துக்கு பொறுப்பேற்ற உங்கள் சிங்கப்பூர் நண்பரை உங்களுக்கு இன்னும் நினைவிருக்கிறதா ? நினைவுகள் குறுகிய காலத்திற்கே என்றாலும் உங்களை ஒரு காலத்தில் முற்றிலும் நம்பாத உங்களுடைய இப்போதைய ஞானத் தந்தையைப் போன்று தேர்வு செய்யப்பட்ட விஷயங்களை மட்டுமே நினைவில் வைத்துள்ளீர்களா ?
ஜோகூர் மக்களாகிய நாங்கள் வர்த்தக வட்டாரத்தில் உள்ள பல பெரும் புள்ளிகளுடன் உங்களுக்கு இருந்த தொடர்புகளை நன்கு அறிவோம்.
கடந்த சில ஆண்டுகளாகக் கல்வி அமைச்சிலும் உங்கள் நல்ல காலம் தான். அதற்கு முன்னர் அனைத்துலக வாணிக தொழிலியல் அமைச்சு உங்களுக்கு நல்ல ஆதாயமாக இருந்தது.
நீங்கள் சொல்வதைச் செய்யும் மனிதர் என்றால் உங்கள் வங்கிக் கணக்குகளையும் உங்கள் சேவகர்கள் பெயரில் உள்ள கணக்குகளையும் காட்டுங்கள்.
அடையாளம் இல்லாதவன்_3ff5: ஏற்கனவே ஏசிஏ/எம்ஏசிசி விசாரித்து ஏதுமில்லை என அறிவிக்கப்பட்டு விட்ட 20 கணக்குகளை விளக்குமாறு அன்வார் இப்ராஹிமைக் கேட்டுக் கொண்டதின் மூலம் முழு விவகாரத்தையும் தொடக்கி வைத்ததே முஹைடின் தான்.
தம்மிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்றால் முஹைடின் அன்வாருடைய சவாலை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அவர் அதனைச் செய்யாமல் அந்த விஷயம் பற்றி கேள்வி எழுப்பிய நிருபரை சாடியுள்ளார்.
ஸ்கார்ப்பியோன் விவகாரத்தில் கருத்துக் கூற முடியாது எனச் சொன்னதைப் போல இதிலும் கருத்துரைக்க மறுத்திருக்க வேண்டும். அதற்குப் பதில் அவர் நிருபர் மீது பழி போட்டது பொறுப்பற்ற செயலாகும்.
பல இனம்: அது அன்வார் விடுத்த நியாயமான சவால் என்று நான் நினைக்கிறேன். அவர் மீது வாயைத் திறந்து முதலில் கருத்துக் கூறியது நீங்களே. ஆகவே உங்கள் வங்கிக் கணக்குகள் அனைத்தையும் காட்டுமாறு சவால் விடுவதற்கு அன்வாருக்கு எல்லா உரிமையும் உண்டு.
அன்வார் தமது கணக்குகளை எல்லாரிடமும் காட்ட அன்வார் விரும்புவார் என நான் எண்ணவில்லை. என்றாலும் கூட நீங்கள் சவாலை ஏற்க மாட்டீர்கள் என்பதை நன்கு அறிந்துள்ளதால் தான் அன்வார் துணிச்சலுடன் அந்தச் சவாலை விடுத்தார். உங்களிடம் மறைப்பதற்கு நிறைய இருக்கிறது என அவர் நினைத்தாரோ என்னவோ ?
முஷிரோ: அன்வார் தமது கணக்குகளைக் காட்டுவதற்காக முஹைடின் தமது கணக்குகளை காட்ட வேண்டும்.
முஹைடினிடம் அத்தகைய பணம் இல்லை என்றால் அவர் அதனை மெய்பிப்பதே நல்லது.
நஜிப் ரசாக், ரோஸ்மா மான்சோர், முஹைடின், பல அமைச்சர்கள் ஆகியோருக்கு கொழுத்த கணக்குகள் இருப்பதாக பல மலேசியர்கள் நம்புகின்றனர். தாங்கள் தூய்மையானவர்கள் என்பதைக் காட்ட தலைவர்கள் தங்கள் கணக்குகளை அறிவிக்க வேண்டும்.
டிபிஎன்: நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கைக் காட்டுவதற்குத் தயாராக இல்லை என்றால் அவ்வாறு செய்யுமாறு மற்றவர்களைக் கேட்டுக் கொள்ள வேண்டாம். அதனால் உங்களை நீங்களே முட்டாளாக்கிக் கொள்கின்றீர்கள்.
லிம் ஆ காவ்: அன்வாரிடம் அதனைக் காட்ட வேண்டாம். எங்களிடம் காட்டுங்கள் !