PKFZ வழக்கில் நீதிபதி விலகிக் கொள்ள வேண்டும் என லிங் கோருகிறார்

PKFZ என்ற போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி விவகாரத்தில் மோசடிக் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் லியோங் சிக், அந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி அகமாடி அஸ்னாவி தம்மை விலக்கிக் கொள்ள வேண்டும் என விண்ணப்பித்துக் கொண்டுள்ளார்.

நீதிமன்றம் இன்று அந்த முன்னாள் மசீச தலைவருடைய சாட்சியத்தை செவிமடுப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.

லிங்-க்கு எதிரான வழக்கில் போதுமான ஆதாரங்களை காட்டியிருப்பதால் லிம் எதிர்வாதம் செய்ய வேண்டும் என மார்ச் 9ம் தேதி தாம் வழங்கிய 83 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் நீதிபதி அகமாடி ஆணையிட்டார்.

புதிய மாற்றத்தைத் தொடர்ந்து லிங்-கின் விண்ணப்பம் முதலில் விசாரிக்கப்பட்டு நீதிபதி முடிவு அறிவித்த பின்னரே லிங் சாட்சியமளிக்க முடியும்.

PKFZ திட்டத்திற்கான நிலத்தின் கொள்முதல் விலை மீது ஆண்டுக்குக் கூடுதலாக 7.5 விழுக்காடு வட்டி விகிதம் விதிக்கப்பட்டுள்ளதை அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அமைச்சரவையிடமிருந்து மறைத்ததின் மூலம்  அரசாங்கத்தை ஏமாற்றியதாக  லிங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மதிப்பீட்டு, சொத்துச் சேவைத் துறை, சதுர அடி ஒன்றுக்கு 25 ரிங்கிட் என்ற விகிதத்தில் அந்த நிலத்துக்கு விலையை அல்லது கூப்பன் வட்டி உட்பட 1.09 பில்லியன் ரிங்கிட்டை நிர்ணயம் செய்திருந்தது.

லிங் மீது 2010ம் ஆண்டு ஜுலை மாதம் 29ம் தேதி குற்றவியல் சட்டத்தின் 418வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஏழாண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

அந்தக் கூடுதல் வட்டி விகிதம் பற்றி அமைச்சரவைக்கான தமது அறிக்கையில் வேண்டுமென்றே சேர்க்கவில்லை, அதனைச் சொல்லாமல் ஏமாற்றிய இரண்டு மாற்றுக் குற்றச்சாட்டுக்களையும் லிங் எதிர்நோக்கியுள்ளார்.

 

TAGS: