அரசாங்கத்திடமிருந்து சிறப்பு ஆணையைப் பெறும் வழக்குரைஞர் ஒருவர், ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவர் தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்டுள்ள விவகாரங்கள் தொடர்பில் அவர் மீது வழக்குத் தொடுக்க முடியும் என சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார்.
“தனி நபர் என்ற முறையில் ஏஜி மீது அவருக்கு கீழ் வேலை செய்கின்றவர்கள் வழக்குப் போட முடியாது. காரணம் அவரது உதவியாளர்கள் அவ்வாறு செய்வது சிரமமாகும். அரசமைப்பின் கீழ் தனி நபர் ஒருவருக்கு – தொழில் செய்யும் வழக்குரைஞர் ஒருவருக்கு- வழக்குத் தொடுப்பதற்கு ஆணை வழங்கப்படலாம்,” என நஸ்ரி சொன்னார்.
ஏஜி சம்பந்தப்பட்ட புகார் ஒன்றை எப்படிக் கையாளுவது என பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் இன்று பதில் அளித்த நஸ்ரி அவ்வாறு கூறியுள்ளார்.
முதலமைச்சர் ஒருவர் சம்பந்தப்பட்ட ஊழல் விவகாரத்தில் வழக்குத் தொடரப்படுவதை ஏஜி தடுத்து வருவதாக முன்னாள் கோலாலம்பூர் சிஐடி தலைவர் மாட் ஜைன் இப்ராஹிம் மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டதை கோபிந்த் சுட்டிக்காட்டினார்.