முன்னாள் போலீஸ் அதிகாரி: கம்யூனிஸ்ட் “கீழறுப்பு சக்திகள்” பல்கலைக்கழகங்களில் உள்ளன

கம்யூனிஸ்ட் இயக்கம் மலேசியாவில் பெரும்பாலும் நமது உயர் கல்விக் கூடங்களில்  இன்னும் உயிருடன் இருப்பதாக முன்னாள் போலீஸ் சிறப்புப் பிரிவு தேசிய இயக்குநர் சுல்கிப்லி அப்துல் ரஹ்மான் கூறுகிறார்.

“கம்யூனிஸ்ட் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் இன்னும் மறையவில்லை. அது நமது கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கலாம்,” என அவர் நேற்றிரவு கோலாலம்பூரில் சுல்தான் சுலைமான மன்றத்தில் பெர்க்காசா அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்வில் கூறினார்.

போலீஸ் படையில் வேவுப் பிரிவான சிறப்புப் பிரிவில் உயர் நிலை அதிகாரியாகப் பணியாற்றிய சுல்கிப்லி, ‘கம்யூனிஸ்ட் கொடூரங்கள், முகமட் இந்ரா என்ற மாட் இந்ரா, சுதந்திரம்’ என்னும் தலைப்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய நால்வரில் சுல்கிப்லியும் ஒருவர் ஆவார்.

அன்றைய மலாயாவில் கம்யூனிஸ்ட் போராட்டம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததாக அவர் சொன்னார். முதலாவதான ஆயுதமேந்திய இயக்கம் “இறுதி வீரப் போராட்டம்’ என அழைக்கப்பட்டது.

இரண்டாவது மலாயா ஐக்கிய முன்னணி என்ற ‘ரகசிய’ இயக்கமாகும். அது சமூக அமைப்புக்களில் ஊடுருவி மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளைப் பெரிதுபடுத்தியது. அந்தப் பிரச்னைகளைப் பயன்படுத்திக் கொண்டு கீழறுப்பு வேலைகளை செய்ததுடன் மக்களை மாற்றவும் முயற்சித்தது என அவர் சொன்னார்.

கம்யூனிஸ்ட் அமைப்பின் அந்த “சமூக” அம்சம் இன்றைய தினம் வரை உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதாக அவர் கருதுகிறார்.

“கம்யூனிஸ்ட்களைப் பொறுத்த வரையில் காலம் என எதுவும் கிடையாது. அவர்கள் மலேசியாவை இன்னும் கம்யூனிசத்திற்கு மாற்ற விரும்புகின்றனர்,” என அந்த போலீஸ் படையின் சிறப்புப் பிரிவு மூத்த அதிகாரி குறிப்பிட்டார்.

உலகத்தை தங்கள் நம்பிக்கைக்கு மாற்றுவதே கம்யூனிஸ்ட்களின் நீண்ட கால சித்தாந்தப் போராட்டத்தின் நோக்கம் என அவர் சொன்னார். அவர் தமது கருத்துக்கு ‘கம்யூனிசம் முற்றுகைக்கு இலக்காகியுள்ளது’ என்னும் தலைப்பைக் கொண்ட புத்தக்கத்தை மேற்கோள் காட்டினார்.

“மலாயா ஐக்கிய முன்னணி அந்த நாளில் மலாயா சமூகத்தில் பல்வேறு பிரிவுகளில் குறிப்பாக உயர் கல்விக் கூடங்களில் ஊடுருவியது. ஆட்களைச் சேர்க்கும் வேலையும் அங்கு தான் நடைபெற்றது.”

‘ஏன் மாட் இந்ரா?’

அதன் விளைவாக கல்வி கற்ற நமது இளைஞர்கள் பலர் கம்யூனிசத்துக்கு ‘மாற்றப்பட்டதாக’ சுல்கிப்லி   நம்புகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ‘கம்யூனிசத்திற்கு மாறியது’ சமய நம்பிக்கையைப் போன்று வலுவானது என்று முன்னாள் மலாயாக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமைச் செயலாளர்  சின் பெங் கான்பெராவில் ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகத்தில் அளித்த பேட்டியில் கூறியதை அவர் சுட்டிக் காட்டினார். ஆகவே கம்யூனிச சித்தாந்தத்தை பின்பற்றியவர்கள் இறுதி வரை மாற மாட்டார்கள் என்பதே அதன் பொருள் ஆகும்.

“திரைமறைவாக உள்ள அத்தகைய கம்யூனிஸ்ட்கள், மாட் இந்ராவை தேசிய வீரர் என்று பாராட்டியதின் வழி நடப்புச் சர்ச்சையை உருவாக்கிய பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபுவுக்கு பின்னணியில் இருந்திருக்கலாம்.” என சுல்கிப்லி கருதுகிறார்.

“மாட் சாபு ஜோகூரை சேர்ந்தவர் அல்ல. அவருக்கு மாட் இந்ரா என்றால் யார் என்பது கூடத் தெரியாது. ஆனால் அவர் ஏன் மாட் இந்ராவைத் தேர்வு செய்தார்? புர்ஹானுடின் ஹெல்மி போன்ற மற்ற தலைவர்களை அவர் ஏன் கூறவில்லை?’

“மாட் சாபு கம்யூனிஸ்ட் அல்ல. அவர் கம்யூனிஸ்ட் என நானும் நினைக்கவில்லை. மாட் இந்ரா பிரச்னையை அவர் எழுப்புவதற்குப் பின்னணியில் இருந்தவர்கள் யார்? அது திட்டமிடப்பட்டதா?” என அவர் வினவினார்.

“மாட் இந்ரா கம்யூனிஸ்ட் ஆவார்”

அப்துல்லா சிடி போன்ற பல முன்னாள் கம்யூனிஸ்ட் தலைவர்கள் வெளியிட்டுள்ள பல புத்தகங்கள் ஒரே மாதிரியாகவும் ஒரே தொனியிலும் எழுதப்பட்டுள்ளன. எனவே அந்த புத்தகங்கள் அனைத்தும் ஒரே ஆதாரத்திலிருந்து எழுதப்பட்டிருக்க வேண்டும் என சுல்கிப்லி கருதுகிறார். அந்தச் சித்தாந்தத்திற்கு புத்துயிரூட்ட முயலும் தீவிரத் தொண்டர்களே அந்த ஆதாரம் என அவர் குறிப்பிட்டார்.

“அவர்கள் மாட் சாபுவிடம் சொல்லியிருக்கலாம்: நீங்கள் ஏன் மாட் இந்ரா விவகாரத்தை எழுப்பக் கூடாது என்று”, என்றார் சுல்கிப்லி.

சுதந்திரப் போராட்ட வீரரான மாட் இந்ரா, சுதந்திரப் போராட்ட அமைப்பான பிகேஎம்எம் என்ற Parti Kebangsaan Malaya Merdeka விலும் அப்பி என்ற Angkatan Pemuda Insaf தீவிர உறுப்பினராக இருந்தார்.

ஆனால் அவர் பின்னர் மலாயாக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுதப் போராட்டத்தில் இணைந்து கொண்டார்.

அதனால் அவர் கம்யூனிஸ்ட் என முத்திரை குத்தப்பட்டுள்ளார். ஆனால் அவரது குடும்பம் அதனை மறுக்கிறது.

புக்கிட் கெப்போங் போலீஸ் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட கம்யூனிஸ்ட் தாக்குதலுக்கு தலைமை தாங்கியதாகவும் மாட் இந்ரா மீது பழி சுமத்தப்பட்டுள்ளது. அந்தத் தாக்குதலில் 20 போலீஸ் அதிகாரிகளும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் உயிரிழந்தனர்.

கான்பெராவில் வழங்கிய பேட்டியில் சின் பெங், மாட் இந்ரா, கம்யூனிஸ்ட் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். அவர் தென் பகுதிக்கான மலாயாக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுதப் பிரிவுகளுக்கு வட்டாரத் தளபதியாகவும் இருந்தார் என்றும் சின் பெங் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: