13வது பொதுத் தேர்தல்: பிஎன் நிகழ்ச்சி நிரலில் ‘மகாதீர் சிந்தனைகளை’ புகுத்தும் ரகசிய நடவடிக்கையா ?

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பிஎன் நிகழ்ச்சி ந்ரலில் ‘மகாதீர் சிந்தனைகளை’ ரகசியமாகத் திணிப்பதற்கு அந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் முயன்று வருகிறாரா ?

நஜிப் அப்துல் ரசாக் நிர்வாகத்தை மகாதீர் குறை கூறியிருப்பதைத் தொடர்ந்து அந்தக் கேள்வியை மூத்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான லிம் கிட் சியாங் எழுப்பியுள்ளார்.

அவர் தமது கேள்விக்கு அடிப்படையாக மகாதீர் அண்மையில் ஏஎப்பி செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய பேட்டியைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பேட்டியில் இனப் பதற்ற நிலைக்கு நஜிப் தாராளமயத்தை அமலாக்க மேற்கொண்ட முயற்சிகளே காரணம் என்றும் நஜிப்ப்பின் ஒரே மலேசியா கொள்கை “தெளிவாக வரையறுக்கப்படவில்லை” என்றும் மகாதீர் கூறியுள்ளதை லிம் சுட்டிக் காட்டினார்.

என்றாலும் நஜிப் இப்போது எதிர்நோக்கும் இக்கட்டான சூழ்நிலைக்கு தாமும் ஒரு காரணம் என்பதைச் சொல்வதற்கு மகாதீர் தவறி விட்டதாக லிம் கூறிக் கொண்டார்.

“மகாதீர் நமக்கு முழுக் கதையையும் சொல்லத் தவறி விட்டார். அவர் 1991ம் ஆண்டு 2020  இலட்சியத்தை அறிவித்த போது பாங்சா மலேசியா கோட்பாட்டையும் உருவாக்கிய போதிலும் ஒவ்வொரு மலேசியரும் முதலில் தங்களை மலேசியர்களாகவும் இரண்டாவதாக இனத்தையும் கருத வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்ட நஜிப்பின் ஒரே மலேசியா கோட்பாட்டைத் தொடக்கத்திருந்தே நிராகரித்து வந்துள்ளார்,” என லிம் தெரிவித்தார்.

அத்துடன் “நான் முதலில் மலாய்க்காரன் இரண்டாவதாக மலேசியன்” என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் பிரகடனம் செய்ததையும் மகாதீர் அங்கீகரித்துள்ளார்.

மலாய் வலச்சாரி நெருக்குதல் அமைப்பான பெர்க்காசா போன்ற ஒரே இனத்துக்குப் போராடும் அமைப்புக்களையும் மகாதீர் ஏற்றுக் கொண்டுள்ளார். மகாதீர் பெர்க்காசாவுக்கு புரவலரும் ஆவார்.

அவரது அங்கீகாரம் இன ரீதியாக ஒன்றுபடும் நிலையை அதிகரித்துள்ளது எனவும் லிம் வாதாடினார்.

“அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் நிகழ்ச்சி நிரலில் ‘மகாதீர் சிந்தனைகளை’ புகுத்தும் ரகசிய நடவடிக்கைகளை மகாதீர் மேற்கொண்டுள்ளாரா என்ற கேள்வி இப்போது மலேசியர்கள் மனதில் எழ வேண்டும்,” என அவர் சொன்னார்.