பெர்சே 3.0 பேரணியின் போது ஏற்பட்ட ‘இழப்புக்களுக்காக’ 351,203 ரிங்கிட் 45 சென் இழப்பீடு கோரி பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனுக்கும் பெர்சே குழு உறுப்பினர் மரியா சின் அப்துல்லாவுக்கு DBKL என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த நோட்டீஸ் கிடைத்த 14 நாட்களுக்குள் 100 ரிங்கிட் நோட்டீஸ் கட்டணத்துடன் அந்த பில்லை கட்டுமாறும் அவர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.
அவர்கள் அதனைச் செய்யத் தவறினால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
DBKL தலைமை இயக்குநர் சாலே யூசோப் கையெழுத்திட்டுள்ள அந்தக் கடிதம் இன்று காலை அம்பிகா வீட்டில் நேரடியாக சேர்ப்பிக்கப்பட்டது.
சாலே அந்தக் கடிதத்துடன் DBKLன் ஒவ்வொரு துறைக்கும் ஏற்பட்ட ‘சேதங்களுக்கான’ பில் பட்டியலையும் கூட இணைத்துள்ளார்.
அவற்றுள் நில வடிவமைப்புக்கும் மரங்களுக்கும் ஏற்பட்டுள்ள சேதம், கம்பித் தடுப்புக்களைப் போடுவதற்கான செலவுகள், போக்குவரத்து மற்றும் ஆதரவு ஊழியர் செலவுகள், தடுப்புக்களுக்கும் அடையாளப் பலகைகளுக்கும் ஏற்பட்ட சேதங்கள், மிகை நேர அலவன்ஸ்கள், உணவு, சுவைபானங்கள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கான போக்குவரத்துச் செலவுகள் ஆகியவையும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
டாத்தாரன் மெர்தேக்கா வரலாற்று சிறப்பு மிக்க இடமாகவும் சுற்றுப்பயணிகளைக் கவரும் இடமாகவும் இருப்பதால் அந்தச் சதுக்கத்தில் பேரணி நடத்தப்படுவதற்கு மேயர் தடை விதித்தார் என்றும் அந்தக் கடிதம் கூறுகிறது.
அந்தத் தடைக்குப் போலீஸ் ஆதரவு அளித்தது. டாத்தாரான் மெர்தேக்காவில் ஏப்ரல் 28 முதல் மே முதல் தேதி வரையில் எந்தப் பேரணியும் நடத்தப்படுவதற்குத் தடை விதிக்கும் உத்தரவை கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் ஒருவர் வெளியிட்டதையும் அது சுட்டிக் காட்டியது.
“ஆனால் நீங்கள் (அம்பிகாவும் மரியாவும்) 2012 ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணியை நடத்தினீர்கள். அது கட்டுப்பாட்டை மீறிச் சென்று கோலாலம்பூர் மாநகரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன் பொதுச் சொத்துக்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தியது.”
“பெர்சே 3.0 பேரணியின் விளைவாக கோலாலம்பூர் மேயருக்கு பின்வரும் சேதங்கள் ஏற்பட்டன.”
பெர்சே 3.0 பேரணியின் ஏற்பாட்டாளர் என்ற முறையில் நீங்கள் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்,” என அந்தக் கடிதம் தொடர்ந்து கூறியது.
அந்தக் கடிதத்துக்கு உடனடியாகப் பதில் அளித்த அம்பிகாவும் மரியாவும் அந்தக் கோரிக்கை, தங்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள ‘குறி வைக்கப்பட்ட அச்சுறுத்தல்’ என வருணித்தார்கள்.
அதனை “தீவிரமாக” எதிர்த்து போராடப் போவதாகவும் அவர்கள் கூறினர்.
பெர்சே-யின் இன்னொரு கூட்டுத் தலைவரான தேசிய இலக்கியவாதி ஏ சமாட் சைட், மற்ற பெர்சே வழிகாட்டல் குழு உறுப்பினர்கள் ஆகியோர் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை.
தூய்மையான நியாயமான தேர்தல்களைக் கோரி நடத்தப்பட்ட பெர்சே 3.0 பேரணியில் 100,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டார்கள். தடைகள் நீக்கப்படும் வரையில் அமைதியாகவும் குதூகலமாகவும் அந்தப் பேரணி நடந்தது. போலீசார் அடுத்து இரசாயனம் கலந்த நீரையும் கண்ணீர் புகைக் குண்டுகளையும் கூட்டத்தினர் மீது பாய்ச்சினர்.
போலீசார் தங்களை கடுமையாக தாக்கியதாகவும் கைது செய்ததாகவும் நிருபர்களும் ஆர்ப்பாட்டக்காரர்களும் கூறினார். அதே வேளையில் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசாருக்குக் காயத்தை ஏற்படுத்திய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
சீன நாளேடான குவாங் மிங்-கின் படப் பிடிப்பாளரைத் தாக்கியதாக இது வரை இரண்டு போலீஸ்காரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பெர்சே 3.0 பேரணியில் நிகழ்ந்த வன்முறைகள் பற்றி விசாரிக்க முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் ஹனீப் ஒமார் தலைமையில் அரசாங்கம் சுயேச்சைக் குழு ஒன்றையும் அமைத்துள்ளது.