‘சித்திரவதை’ தொடர்பில் சுஹாகாம் கைதிகளைச் சந்திக்கும்

குவாண்டானாமோ-பாணி சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படுவது பற்றி ஆராய மனித உரிமை ஆணையம், உள்நாட்டுப் பாதுகாப்புச்  சட்ட(ஐஎஸ்ஏ)த்தின்கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களைச் சந்திக்கவுள்ளது.

நேற்று அந்த ஆணையம் அதன் வழக்கமான கூட்டத்தில் அவ்விவகாரம் பற்றி விவாதித்ததாகக் கூறிய ஆணையர் முகம்மட் ஷா’அனி அப்துல்லா, அடுத்த இரண்டு வாரங்களில் சுஹாகாம் கைதிகளைச் சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

“அப்படிக் கூறப்பட்டிருப்பதற்கு ஆதாரம் உண்டா என்று ஆராய்வோம்.இப்போதுள்ள கைதிகள் மட்டுமல்ல, முன்னாள் கைதிகளும் அதைப் பற்றிப் பேசியுள்ளனர்….சிலர் நூல்களும் எழுதியுள்ளனர்”, என்றாரவர்.

சுஹாகாம் மருத்துவ ஆவணங்களையும் பரிசீலிக்கும்.

பேராக் கமுந்திங்கில் வெளிநாட்டவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது பற்றியும் சுஹாகாம் ஆராய்ந்து வருகிறது.

“ஆணையர் ஜேம்ஸ்(நாயகம்) தூதரகங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துள்ளார்.சிலர், தங்கள் நாட்டவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது பற்றித் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றனர்.அவர்கள் இப்போது தடுத்து வைக்கப்பட்டவர்கள் சார்பில் அரசாங்கத்தைச் சந்தித்து பேச்சு நடத்தி வருகின்றனர்”, என்று  முகம்மட் ஷா’அனி கூறினார்.

கைதிகள் கொடிய முறையில் சித்திரவதை செய்யப்பட்ட செய்தியை மலேசியாகினி திங்கள்கிழமை வெளியிட்டிருந்தது. தடுப்புமுகாமிலிருந்து கடத்திக்கொண்டுவரப்பட்ட குறிப்புகளிலிருந்து அதை அறியவந்ததாக அது கூறியது.

கைதிகளை உள்சில்வாருடன் தலைகீழாக தொங்க விட்டு அடித்தல்,பிறப்புறுப்புகளில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றுதல், மயிர்களைப் பிடுங்கி எறிதல்,பிறப்புறுப்புகளை சிகரெட் துண்டால் சுடுதல் எனப் பல வகைகளில் கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டதாக அதில் கூறப்பட்டிருந்தது.

60-நாள் அடையாளம் தெரியாத இடத்தில்  விசாரணைக்காக வைக்கப்பட்டிருந்த காலத்தில் இவ்வளவும் நடந்திருக்கிறது.

ஆனால், போலீஸ் அவ்வாறு சொல்லப்படுவதற்கு “ஆதாரமில்லை” என்று உதறித்தள்ளி இருப்பதுடன் அது, போலீஸ் மற்றும் சிறப்புப் பிரிவின் பெயரைக் கெடுப்பதற்காக “தீய நோக்கத்துடன்” சொல்லப்படும் குற்றச்சாட்டு என்றும் கூறியுள்ளது.

தடுப்புக்காவலில் இருப்போர் பொதுமக்களின் கவனத்தையும் இரக்கத்தையும் பெறுவதற்காகவும் அப்படிப் பெற்றால் விரைவில் விடுவிக்கப்படலாம் என்ற நம்பிக்கையிலும் அவ்வாறு கூறியிருக்கலாம் என்று போலீஸ் கூறிற்று.

TAGS: