மலேசியாவில் ஜனநாயகத்தின் எதிர்காலம் பற்றிய விவாதம், ‘இஸ்லாமிய நாடு’ என்ற கோட்பாடு மீது மசீச செனட்டர் கான் பிங் சியூ-வும் பாஸ் பாரிட் புந்தார் எம்பி முஜாஹிட் யூசோப் ராவா-வும் மோதிக் கொண்டனர். அதனால் அந்த விவாதம் சரியான பலப் பரீட்சையாக இருந்தது.
ஆங்கில மொழியில் மலேசியாகினி ஏற்பாடு செய்த அந்த விவாதத்தில் அவர்கள் இருவரும் பேசினார்கள்.
“பாஸ் ஹுடுட் நாட்டின் அடிப்படை கட்டமைப்பையே மாற்றி விடும்” என கான் தமது கட்சியின் நிலையை எடுத்துரைத்த பின்னர் இருவருக்கும் இடையில் மோதல்கள் தொடங்கின.
“மலேசியா ஜனநாயகம் முன்னேற்றப் பாதையில் செல்கிறதா ?” என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட அந்த விவாதத்தில் பிஎன் தரப்பில் அம்னோவின் கோத்தா பெலுட் எம்பி அப்துல் ரஹ்மான் டஹ்லானும் கானும் பங்கு கொண்டனர். பக்காத்தான் ராக்யாட் தரப்பில் பாஸ் கட்சியின் முஜாஹிட்டும் பிகேஆர் -ன் சுபாங் எம்பி யூசோப் ராவாவும் பிரதிநிதித்தார்கள்.
கான் தொடக்க உரையில் அது குறித்து தெரிவித்த போதிலும் சமய நம்பிக்கையை கைவிடுவது ( apostasy ) மீது கூட்டத்தினரிடமிருந்து எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு முஜாஹிடின் அளித்த பதில் கருத்து மோதல்களை திறந்து விட்டது.
“இஸ்லாம் தேர்வுகளை மதிக்கிறது” என பாஸ் எம்பி கூறிய போது பெரும்பாலும் மலாய்க்காரர் அல்லாதாராக இருந்த கூட்டத்திலிருந்து பலத்த கைதட்டல் எழுந்தது.
கோலாலம்பூரில் உள்ள கோலாலம்பூர், சிலாங்கூர் சீனர் அசெம்பிளி மண்டபத்தில் அந்த விவாதம் நடைபெற்றது.
சமய நம்பிக்கையை கைவிடுவது மீது அறிவு சார்ந்த விவாதங்கள் இன்னும் கூடுதலாக நடைபெற வேண்டும் என நான் விரும்புகிறேன். இஸ்லாமியப் போதனைகளில் அது அடங்கியுள்ளது. ஆனால் அது விளக்கமாகும்.”
“வரலாறு பற்றிய எனது அறிவாற்றலின் அடிப்படையில் சமய நம்பிக்கையைக் கை விடுவது என்பது சமயத்திலிருந்து விலகுவது பற்றியது அல்ல என நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். வரலாற்று அடிப்படையில் அது முறைக்கு எதிராக செல்வதாகும். துரோகியாக மாறுவது சம்பந்தப்பட்டதாகும். அதனை மீண்டும் வரையறுக்க வேண்டும் என அவர் அங்கு கூடியிருந்த 280 பேரிடம் கூறினார்.
“சமய நம்பிக்கையைக் கைவிடும் விஷயத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்துவது தான் இப்போதைய பிரச்னை ஆகும்.”
“நீங்கள் உங்கள் சொந்த மனச்சாட்சியைக் கொண்டு உங்கள் சமயத்தைத் தேர்வு செய்ய வேண்டும். சட்டத்தை மதித்து நீங்கள் அதனைச் செய்தால் சமய நம்பிக்கையை கைவிடும் விஷயத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. இரண்டு தரப்புக்களும் தங்களது குறுகிய நோக்கங்களுக்காக சமய நம்பிக்கையை கைவிடும் பிர்சனையை சிலர் பயன்படுத்துவது தான் பிரச்னை,” பாஸ் கட்சியின் இஸ்லாமிய நாடு குறித்த எண்ணங்களைத் தாக்குவதற்கே கான் தமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பெரும்பகுதியை எடுத்துக் கொண்டார். அதனால் அவற்றை சமாளிப்பதற்காக முஜாஹிட் பேச வேண்டியிருந்தது.
பாஸ் தலைமையில் இயங்கும் கிளந்தானில் ஹுடுட் சட்டம் அமலாக்கப்படவில்லை என்றாலும் பாத்வா மறுபரிசீலினை செய்வதற்கு நீதிமன்ற ஆய்வுக்கு விண்ணப்பிப்பதை தடை செய்யும் விதியை அண்மையில் கெடாவில் அறிமுகம் செய்யப்பட்டது மீது கான் அபாய ஒலியை எழுப்பினார்.
“மசீச-வைக் கண்டு அம்னோ அஞ்சுவதால் ஹுடுட் சட்டத்தை அமலாக்க முடியவில்லை என பாஸ் சொல்கிறது.
நான் இது குறித்து பெரிதும் கவலைப்படுகிறேன். ஹுடுட் சட்டத்தை அம்னோ அமலாக்க முடியாது என அது சொல்லும் போது பிரதமர் மீதும் பிஎன்-னில் உள்ள என் சகாக்கள் மீதும் தொடுக்கப்படும் அழுத்தத்தைக் கற்பனை செய்யுங்கள்.”
“இஸ்லாம் மிதவாதமானது என நான் நம்புகிறேன். கட்டாயம் ஏதுமில்லை. ஆனால் நீங்கள் உங்கள் பண்புகளையும் வாழ்க்கை முறையையும் திணிக்க விரும்பினால் தயவு செய்து ஒதுங்கிப் போய் விடுங்கள்,” என்றார் அவர்.
இஸ்லாமிய கிரிமினல் சட்டம் “பயங்கரக் கனவாக இருக்கும்” என்றும் ஒரே குற்றத்துக்கு குற்றவாளி முஸ்லிமா இல்லையா என்பதைப் பொறுத்து வெவ்வேறு வகையான தண்டனைகளை அது வழங்குகிறது என்றும் வழக்குரைஞருமான கான் சொன்னார்.
கான் பேசும் போது இடை மறித்த முஜாஹிட், “பாஸ் ஹுடுட் என எதுவுமில்லை” என்றார். அதற்குப் பதில் அளித்த கான், அந்த அறிக்கை “உண்மை நிலையிலிருந்து பிறந்தது” என்றார்.
“நீங்கள் ஜனநாயகத்தில் எல்லாவற்றையும் விரும்புவதில்லை. வெறுக்கின்றீர்கள்.”
தமது நிலையை தொடர்ந்து வலியுறுத்திய பாஸ் எம்பி, பாஸ் கட்சிக்கு அவாக்கள் இருந்த போதிலும் அவற்றை ஜனநாயக ரீதியில் செய்ய வேண்டும் என கருதுவதாகச் சொன்னார்.
“கிளந்தானிலும் திரங்கானுவிலும் ஹுடுட் சட்டங்கள் ஜனநாயக ரீதியில் அறிமுகம் செய்யப்பட்டன. அது உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் ஜனநாயகத்தில் நீங்கள் எல்லாவற்றையும் விரும்பவும் மாட்டீர்கள். வெறுக்கவும் மாட்டீர்கள்,” என்றார் முஜாஹிட்.
“இஸ்லாத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான உறவுகள் உருவாக்க அடிப்படையில் பொருள் அடிப்படையில் அமைந்துள்ள கட்டத்துக்கு நாம் வந்து விட்டோம்.”
“பாஸ் அடைந்துள்ள பெரிய முன்னேற்றம் இதுவாகும். அதனை அம்னோவும் மசீச-வும் ஏற்றுக் கொள்வது அவற்றின் பிரச்னையாகும். நாங்கள் முன்னேற்ற சிந்தனைகளைக் கொண்டுள்ளோம். இஸ்லாமியவாதிகள் தங்களை ஜனநாயக நடைமுறைகளில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்,” என குறிப்பிட்ட அவர், இஸ்லாமியக் கட்சி ஒன்றைச் சார்ந்த எகிப்திய அதிபர் ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டினார்.
அத்தகைய மாற்றம் “நிறுவன பிரச்னைகளை” உருவாக்கியுள்ளதை ஒப்புக் கொண்ட முஜாஹிட் நடப்பு சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத்தை பாஸ் உணர்ந்துள்ளதாகச் சொன்னார்.
“இஸ்லாத்துக்கும் ஜனநாயகத்துக்கும் இடையில் எந்தப் பிரிவினையும் இல்லை.”
அவரது கருத்தை பிகேஆர்-ன் சிவராசா ஆதரித்தார். ஹுடுட் மீது பக்காத்தான் உறுப்புக் கட்சிகளுக்கு இடையில் வெவ்வேறான கருத்துக்கள் நிலவுவதால் கான் தொடர்ந்து பக்காத்தானைத் தாக்குவது நல்லதல்ல என்று அவர் சொன்னார்.
“இஸ்லாமிய நாடு எங்களுடைய பொது வடிவமைப்பில் இல்லை. உலகம் முழுவதும் கூட்டணிகள் அப்படித் தான் வேலை செய்கின்றன. கம்யூனிஸ்ட் கட்சி கம்யூனிஸ்ட்டாக இயங்குவதை நிறுத்திக் கொள்ளாமல் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு நடு நிலைக் கட்சியுடம் கூட்டு சேர முடியும். அது தான் அரசியல் 101!,” என சிவாராசா சொன்ன போது கைதட்டல் பலமாக இருந்தது.
கான் குறிப்பிட்ட ‘சடலங்களைக் கைப்பற்றும் சம்பவங்கள்’ அம்னோ கட்டுப்பாட்டில் இருக்கும் மாநிலங்க தான் நிகழ்ந்துள்ளன என வழக்குரைஞருமான சிவராசா சொன்னார். பல மத மாற்ற வழக்குகளில் அவர் ஆஜராகியுள்ளார்.
“நாம் முன்னேற வேண்டும். இந்தப் பூச்சாண்டி காட்டுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். அது எங்கும் நிலவவே இல்லை. உங்கள் சிந்தனையில் மட்டுமே அது காணப்படுகின்றது. நீங்கள் பயிற்சி பெறுவது நல்லது,” என அவர் கான்-டம் கூறினார்.