கருத்துக் கணிப்பு: பிஎன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் சாத்தியமில்லை

அடுத்து வரும் தேர்தலில் ஐந்து விழுக்காடு வாக்குகள் வேறுபாட்டில் பாரிசான் நேசனல் தன் வசம் இப்போது உள்ள 137 நாடாளுமன்றத் தொகுதிகளையும் தக்க வைத்துக் கொள்ளும்.

அந்த எண்ணிக்கை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை அது பெறுவதற்குப் போதுமானது அல்ல.

இவ்வாறு சென்ஸ் என்ற வியூக கலந்துரையாடல் மய்யம் மேற்கொண்ட விரிவான ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பிஎன் தேர்தல் எந்திரத்தின் வலிமையையும் அமைப்பு முறையையும் தேர்தல் முடிவுகள் இன்னும் பெரிதும் சார்ந்துள்ளதாகவும் அந்த மய்யம் குறிப்பிட்டுள்ளது.

“நடப்பு உணர்வுகள் அடிப்படையில் பார்த்தால் ஜோகூர், சபா, சரவாக் ஆகியவற்றில் சீனர்கள் ஆதிக்கமுள்ள தொகுதிகளில் 10 இடங்கள் வரையில் பிஎன் இழக்கக் கூடும்.”

“பெர்சே 3.0 பேரணியின் போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் “போலீஸ் முரட்டுத்தனம்” பற்றிய செய்திகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளன. அவை கறுப்பு வெள்ளையாக பத்திரிக்கைகளை வெளியிட்டுள்ளன. உலக ஊடகச் சுதந்திர தினத்தன்று கறுப்பு நிற உடைகளை அணியுமாறு பத்திரிக்கையாளர்களுக்கும் அனுதாபிகளுக்கும் ஊக்கமூட்டியுள்ளன,” என்றும் அந்த மய்யம் தெரிவித்தது.

அதன் விளைவாக ஜோகூர், சபா, சரவாக்கில் உள்ள சீனர் இடங்களில் பிஎன்-னுக்குப் பாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும் அது குறிப்பிட்டது.

அதே வேளையில் மலாய் வாக்குகள் 2008ம் ஆண்டுக்குப் பின்னர் கிட்டத்தட்ட எட்டு விழுக்காடு அம்னோவுக்கு சாதகமாகத் திரும்பும் என சென்ஸ் எதிர்பார்க்கிறது. அதனால் மலாய் ஆதிக்கம் பெற்ற, மலாய் கலப்பு இன இடங்களில் அம்னோவுக்குக் கூடுதல் வெற்றிகள் கிடைக்கும் எனவும் அது கூறியது.

அம்னோவுக்கு சாதகமான சூழ்நிலையால் பெரும்பாலும் பாதிக்கப்படும் பக்காத்தான் கட்சியாக பிகேஆர் இருக்கும்.

உணர்வுகள், பிரச்னைகள், தலைமைத்துவம், அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள், நிதி வசதிகள், பிரச்சார எந்திரம் ஆகியவற்றை 13வது பொதுத் தேர்தல் முடிவுகள் சார்ந்திருக்கும் என்றும் அந்த மய்யம் தெரிவித்தது.

எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் இணையப் போரை ஒர் அங்கமாக கொண்டுள்ள புதிய அரசியல் வடிவமைப்புக்கு பிஎன் தேர்தல் எந்திரம் தன்னை மாற்றிக் கொண்டு விட்டதா என்பதை தேர்தல் பிரச்சாரம் எடுத்துக் காட்டும்.

 

TAGS: