மகாதீர்: தாய்மொழிப் பள்ளிகள் நம்மைப் பிரித்து வைக்கின்றன

குவாந்தானில் சீன சுயேச்சைப் பள்ளிக் கூடத்துக்கு புத்துயிரூட்ட அரசாங்கம் வழங்கியுள்ள சமிக்ஞை குறித்து முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மகிழ்ச்சி அடையவில்லை.

தாய்மொழிப் பள்ளிக்கூட முறைகள் உண்மையில் நாட்டை பிளவுபடுத்தி விட்டதாக அவர் கூறுகிறார்.

புத்ராஜெயாவில் கட்டுரைப் போட்டி ஒன்றைத் தொடக்கி வைத்த பின்னர் மகாதீர் நிருபர்களிடம் பேசினார்.

சீன சுயேச்சை பள்ளிகள் மீதான கொள்கைகளை மறு ஆய்வு செய்வதைத் தாம் விரும்பவில்லை என்றார் அவர்.

முதலில் குடியேறியவர்கள் ( original settlers ) பேசும் தேசிய மொழியே பள்ளிக்கூடங்களில் போதானா மொழியாக இருக்க வேண்டும் என தாம் நம்புவதாகவும் மகாதீர் சொன்னார்.

“நமது சுதந்தரத்திற்கு போராடியவர்களையும் அரவணைத்துக் கொள்ள நமது மூதாதையர்கள் மிகவும் விரும்பினார். ஆனால் அவர்கள் நம்மைப் பிரித்து வைத்துள்ள ஒரு விஷயத்தில் உடன்பாடு கண்டு விட்டனர்,” என்றார் அவர்.

சீன சுயேச்சைப் பள்ளிகள் கட்டப்படுவதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமா என்றும் மலேசியாவைத் தவிர உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ள Unified Examination Certificate என்ற சான்றிதழை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டுமா என்றும்  மகாதீரிடம் வினவப்பட்டது.

கல்வி முறை தேசிய ஐக்கியத்தைக் கீழறுப்பு செய்வதாகக் குறிப்பிட்ட அவர், தாங்கள் தொடர்ந்து பிரிந்து வாழ வேண்டும் என விரும்புவதால் இன அடையாளப் பிரச்னையை தொடர்ந்து சிலர் எழுப்பிக் கொண்டே இருப்பதாகச் சொன்னார்.

“அவர்கள் ஒரு நாட்டில் இருக்க விரும்பவில்லை. அவர்கள் மூன்று வெவ்வேறு அமைப்புக்களில் இருக்க எண்ணுகின்றனர். கடந்த காலத்தில் முடிவு செய்யப்பட்டதை நம்மால் இப்போது மாற்ற முடியாது. ஆனால் நீங்கள் அதனை மேலும் மோசமடையச் செய்ய வேண்டும் என விரும்பினால் முழுமையாகப் பிரித்து விடுங்கள்.”

“பிரிட்டிஷ்காரர் காலத்துக்கு திரும்பச் செல்லுங்கள். அப்போது சீனர்களில் நகரங்களிலும் இந்தியர்கள் தோட்டங்களிலும் மலாய்க்காரர்கள் மீன்பிடிப்புக் கிராமங்களிலும் வாழ்ந்தார்கள்,”என மகாதீர் கிண்டலாகக் கூறினார்.

மக்களிடம் செல்வாக்குப் பெறுவதற்காக கொள்கைகளை அணுகும் நடைமுறைகளை பின்பற்ற வேண்டாம் என 22 ஆண்டுகளுக்கு நாட்டின் பிரதமராக பணியாற்றியுள்ள அவர் நடப்பு அரசாங்கத்தை எச்சரித்தார்.

“நீங்கள் கொள்கைகளில் உறுதியாக இருக்க வேண்டும். செல்வாக்கைப் பெறுவதற்காக நீங்கள்  எல்லாவற்றையும் பின்பற்றத் தொடங்கினால் நீங்கள் சீரழிந்து போவீர்கள்,” என்றார் அவர்.

சீன சுயேச்சைப் பள்ளிக்கூடங்களை அங்கீகரிப்பது மலேசியர்களை மூன்று பிரிவுகளாக பிரிப்பதற்கு வழி வகுத்து விடும் என மகாதீர் சொன்னார். “ஒவ்வொரு பிரிவும் வெவ்வேறு மொழிகளைப் பேசும்.”

“நாம் ஒன்றாகவே இருக்க முடியாது. அப்போது நாம் ஒரே நாட்டில் இருந்தாலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியாமல் போய் விடும்,” என மகாதீர் மேலும் சொன்னார்.

 

TAGS: