நிச்சயமற்ற சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்கு நாடாளுமன்றத்தை அதன் ஐந்தாண்டு காலத் தவணைக் காலம் முடிந்த பின்னரே கலைப்பது நல்லது எனக் கூறப்படுவதை பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் ஒப்புக் கொண்டுள்ளார்.
“பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறையின் கீழ் ஐந்து ஆண்டுகள் என்பது ஐந்து ஆண்டுகள் என்ற சிந்தனை நிலவுகிறது.”
“அது நாட்டுக்கு நல்லது என்றால் நாம் அதனை விவாதித்து அமல் செய்யலாம்,” என நஸ்ரி சொன்னார்.
அவர் இன்று மக்களவையில் துணை விநியோக மசோதா மீதான விவாதத்தை நிறைவு செய்து வைத்துப் பேசினார்.
நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதால் ஏற்படக் கூடிய பிரச்னைகளை பக்காத்தான் எம்பி-க்கள் விவாதத்தின் போது எடுத்துரைத்தது குறித்து அவர் கருத்துத் தெரிவித்தார்.
அந்த விவகாரம் மீது பாஸ் குபாங் கிரியான் உறுப்பினர் சலாஹுடின் அயூப் மேலும் நெருக்கிய போது தேர்தல் தேதி பற்றிய எல்லாக் கேள்விகளும் இறுதியில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அதிகாரத்துக்கு உட்பட்டவை என நஸ்ரி சொன்னார்.
என்றாலும் நாடாளுமன்றம் முழுத் தவணை முடிந்த பின்னர் கலைக்கப்படுவதே நல்லது, நியாயமானது எனத் தாம் தனிப்பட்ட முறையில் நம்புவதாக நஸ்ரி குறிப்பிட்டார்.
“அத்துடன் உறுதியற்ற சூழ்நிலையையும் அது தவிர்க்கிறது. ஐந்து ஆண்டுகளுக்குத் தாங்கள் பதவியில் இருப்போம் என்பதும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நிச்சயமாகத் தெரியும்.”
“முடியுமானால் ஐந்து ஆண்டுகள் என்பது ஐந்து ஆண்டுகள் என அர்த்தம் இங்கு ஏற்படுவதைக் காண்பதற்கான தூண்டுகோலாக இருக்க நான் விரும்புகிறேன்,” என அந்த அமைச்சர் முடித்தார்.