“வாக்குப் பெட்டிகளில் தோல்வி காணக்கூடிய சாத்தியம் ஏற்பட்டால் மட்டுமே நஜிப் நகர்கிறார். அதுதான் இங்கு நடக்கிறது.”
இசா ரத்துச் செய்யப்படுவதாக நஜிப் அறிவிக்கிறார்
கிட் பி: நான் பிஎன் அரசாங்கத்தை ஆதரிக்காமல் இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. குடிமக்களை தனது விருப்பம் போல் ஜெயிலில் அடைத்து, நியாயமான விசாரணை நிகழுமா என்பது ஒரு புறமிருக்க, விசாரணை ஏதுமில்லாமல் வைத்திருப்பது அதில் முக்கியமான காரணமாகும்.
ஆகவே நான் இசா சட்டம் ரத்துச் செய்யப்படுவதை வரவேற்கிறேன். என்றாலும் அம்னோ/பிஎன் மீது தேர்தல் நடைமுறைகள் மீதான நெருக்குதல் தொடர வேண்டும் என முன்னைக் காட்டிலும் நம்புகிறேன்.
அம்னோவுடன் பிரதமர் நஜிப் ரசாக்கும் வாக்குப் பெட்டிகளில் தோல்வி காணக்கூடிய சாத்தியம் ஏற்பட்டால் மட்டுமே நகர்கிறார்.
நஜிப் எடுத்த நடவடிக்கை மீது இப்போது வான் அளவுக்கு புகழ்ந்து கொண்டிருக்கும் அம்னோ எடுபிடிகளைப் பார்த்தால் எனக்கு நகைப்பாக இருக்கிறது. நேற்று வரை அவர்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய இசா அவசியம் எனச் சொல்லிக் கொண்டிருந்தனர்.
ஆகவே எதனால் மாற்றம் ஏற்பட்டது?
உங்கள் அடிச்சுவட்டில்: அன்புள்ள பிரதமர் அவர்களே, நீங்கள் இந்த “சீர்திருத்தங்களை” திடீரெனக் கொண்டு வந்திருக்க முடியாது. நிச்சயம் நீங்கள் பல்வேறு சம்பந்தப்பட்ட விஷயங்களை சில காலம் சிந்தித்திருக்க வேண்டும்.
அப்படி என்றால் கொடூரமான சட்டங்களும் அவசர காலப் பிரகடனங்களும் மறு ஆய்வு செய்யப்படுகின்ற வேளையில் போது உங்கள் உள்துறை அமைச்சரும் போலீஸும் பிஎஸ்எம் அறுவரை அவசர காலச் சட்டத்தின் கீழ் கைது எப்படிக் கைது செய்ய முடியும்?
நாங்கள் உங்கள் அரசாங்கத்தைப் பற்றி தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். நீங்களும் உங்கள் நிர்வாகத்தில் உள்ள கழுகுகளும் முடிந்த வரை வலிமையைக் காட்டுவது, அடுத்து நிலைமையை உங்களால் சமாளிக்க முடியாது என்ற நிலை உருவானால் நீங்கள் நல்லெண்ணத்தைப் பெறவும் காலத்தைக் கடத்துவதற்கும் பணிந்து போவது.
நான் நிறைய நிகழ்வுகளை பார்த்த பின்னரே இந்த முடிவுக்கு வந்துள்ளேன். பெர்சே 2.0 பேரணி மீது நீங்கள் கடுமையாக நடந்து கொண்டீர்கள். ஆனால் மக்கள் அலை உங்களுக்கு எதிராகத் திரும்பியதைக் கண்டதும் அரங்கம் ஒன்றை வழங்க முன் வருவதாக நீங்கள் அறிவித்தீர்கள்.
மக்களை அடிபணியச் செய்வதற்காக அவர்களை அச்சுறுத்தும் வகையில் பிஎஸ்எம் அறுவர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தீர்கள். மக்கள் இப்போது அஞ்சவில்லை என்பதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். மாற்றத்துக்கான போராட்டத்தை மட்டுப்படுத்த முடியும் என்ற எண்ணத்தில் இப்போது அந்த எல்லா ‘சீர்திருத்தங்களையும்’ அறிவித்துள்ளீர்கள்.
உண்மையில் அரசாங்கம் சில காலமாகவே எதிரிகளை அச்சுறுத்த இசாவைப் பயன்படுத்த விரும்பவில்லை. அடி பணியும் அரசாங்கச் சேவையின் உதவியுடன் எதிரிகளை முடக்குவதற்கு குறிப்பிட்ட கிரிமினல் சட்டங்கள் பயன்படுத்தப்பட்டன.
லையன் கிங்: சட்டங்களை ரத்துச் செய்வது மட்டும் போதாது. ஊழலையும் இனவாதத்தையும் சலுகை காட்டுவதையும் ஒழிக்க வேண்டும். நம் நாட்டை நீண்ட கால அடிப்படையில் சீரழிக்கப் போவது அந்த விஷயங்களே.
நாடாளுமன்றம், நீதித் துறை, நிர்வாகம் ஆகியவற்றின் அதிகாரங்களைத் தனித் தனியாக பிரித்து வையுங்கள்.
நாங்கள் உங்களுக்கு வணக்கம் கூறுவோம். அது வரையில் உண்மையான ஜனநாயகம் இல்லை. வெறும் உதட்டளவுக்கு மட்டுமே.
அனாக் ஜேபி: நஜிப் அவர்களே நல்ல காரியம் செய்தீர்கள். நாகரீகமான சமூகத்தை அடைவதற்கு அதுவே சரியான பாதை.
அக்வினாஸ்: மலேசியாவுக்கு இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். எங்கள் பிரார்த்தனைகளுக்கு பலன் கிடைத்துள்ளது. புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. நமது நாட்டின் நன்மைக்காக மேலும் சீர்திருத்தங்களுக்கு நாம் அழுத்தம் கொடுப்போம்.
அகராதி: இசா ரத்துச் செய்யப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம். பிஎன் செய்வதை எல்லாம் கண்மூடித்தனமாக நாம் கண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை. என்றாலும் இசா-வுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்படவிருக்கும் இரண்டு சட்டங்களைப் பார்க்கும் வரை நமது தீர்ப்பை தள்ளி வைப்போம்.
நான் மலாய்: எல்லோரும் மாறுபட்ட கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது. நஜிப் மலேசியாவை சீர்திருத்த முயலுகிறார். அவரது நடவடிக்கையை அனைவரும் ஆதரிப்போம்.
பார்வையாளன்: இசாவை ரத்துச் செய்வதின் மூலம் பிஎன் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தாது என்பதையும் தனது குடி மக்களை நியாயமாக நடத்தும் என்ற தோற்றத்தை வழங்க நஜிப் முயலுகிறார்.
அன்வார் இப்ராஹிம், தியோ பெங் ஹாக், ஏ குகன் சம்பந்தப்பட்ட விவகாரங்கள், எந்த ஒரு தில்லுமுல்லு நடவடிக்கையையும் அரசாங்க ஊழியர்களைக் கொண்டு நஜிப்பும் பிஎன்-னும் செய்து விட முடியும் என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
நஜிப்பும் பிஎன்-னும் ஊழலான, கொள்கையற்ற அரசாங்க ஊழியர்களைக் கொண்டு யாரையும் சிறையில் அடைக்க முடியும் என்பதால் கொடுமையான இசா சட்டம் தேவை இல்லை என்பதை அவர்கள் இப்போது உணர்ந்துள்ளனர்.
வீரா: இசா சட்டத்தை விருப்பம் போல் பயன்படுத்துவதின் மூலம் சுதந்திரத்தை ஒடுக்க முடியாது என்பதை அந்தத் திருடர்களுக்குப் புரிய வைக்கும் பொருட்டு அந்த விவகாரத்துக்கும் அழுத்தம் கொடுத்த பக்காத்தான் ராக்யாட் கட்சிகளுக்கு நன்றி.
சாதாரண குடி மக்கள் பொங்கி எழுந்தால் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதை பிஎன்-னுக்கு உணரவைத்த பெர்சே 2.0க்கும் நன்றி.