போரினால் பாதிப்படைந்த தமிழர்களுக்கு மலேசிய அரசாங்கம் நிதியுதவி

இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு இடம்பெற்ற போரினால் பாதிப்படைந்த தமிழர்களுக்கு மலேசிய அரசாங்கம் 3.2 மில்லியன் வெள்ளியை நிதியுதவியாக வழங்கியுள்ளது. (காணொளி)

சுமார் 40 பொது இயக்கங்களை பிரதிநிதித்து மலேசிய தமிழர் பேரவை இந்நிதியை பொறுப்பேற்றுள்ளது. இந்நிதியுதவிற்கான மாதிரி காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று காலை கோலாலம்பூர் மாநகராட்சி தலைமையக கட்டிடத்தில் நடைபெற்றது.

ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது 3.2 மில்லியன் வெள்ளிக்கான மாதிரி காசோலையினை கூட்டரசு பிரதேச துணை அமைச்சர் எம். சரவணனிடமிருந்து மலேசியத் தமிழர் பேரவையின் தலைவர் டாக்டர் ஐங்கரன் பெற்றுக்கொண்டார். பேரவையின் பிரதிநிதிகளான வழக்கறிஞர் சி. பசுபதி மற்றும் வழக்கறிஞர் கா. ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.

“சுனாமியின் போதும் அதற்குப் பின்னரும் இலங்கைத் தமிழர்களுக்காக தொடர்ந்து உதவிவரும் மலேசியத் தமிழர் பேரவைக்கு ஒரு அங்கீகாரமாகவும் இப்பணியினை தொடர்ந்து செயல்படுத்தவும் பிரதமர் நஜிப் துன் ரசாக் இந்நிதியுதவியினை வழங்கியதாக இந்நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய துணை அமைச்சர் சரவணன் கூறினார்.

மேலும், இலங்கைப் போரினால் பாதிப்படைந்த தனித்து வாழும் தாய்மார்கள், மாணவர்கள், போரில் தங்களது உடல்உறுப்புகளை இழந்தவர்களுக்கு பல்வேறு பயிற்ச்சித் திட்டங்கள் மூலம் சுய காலில் நிற்க கூடிய ஒரு சமுதாயமாக மாற்றக் கூடிய வேலைத் திட்டங்கள் மற்றும் கல்வி மேம்பாட்டுக்கான திட்டங்களை மேற்கொள்ள பிரதமர் வழங்கியுள்ள இந்நிதியுதவி ஒரு ஊக்கசக்தியாக இருக்குமென துணை அமைச்சர் கூறினார்.

அடையாளம் காணப்பட்டுள்ள  சுமார் 1700 போரினால் பாதிப்படைந்தவர்களுக்கான வேலைத்திட்டத்தின் முதல்கட்ட நிதியாக இந்நிதி மலேசியத் தமிழர் பேரவையால் பயன்படுத்தப்படும் என அவர் மேலும் கூறினார்.

மேலதிக தகவல்களுக்கு காணொளியை பார்வையிடவும்.

TAGS: