அரசாங்க பள்ளிகள் நிலத்துக்கு கல்வி இலாக்காவிடம் விண்ணப்பிக்கவேண்டும்

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

அம்பாங் தமிழ்ப்பள்ளி நில விவகாரத்தின் மீது ம.இ.கா தலைவர் அம்பாங் வில்சனும், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் துரையப்பாவும் தொடர்ந்து தமிழ்ப் பத்திரிக்கைகளில் அறிக்கைகள் கொடுத்து வருவதால் உண்மை நிலையைப் பொது மக்கள் தெரிந்துக்கொள்ள இவ்வறிக்கையை வெளியிடுகிறேன். தமிழ்ப்பள்ளி நில விவகாரங்களில் அரசியல் நாடகமாடாமல் தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலம் கிடைக்க அக்கறை கொண்டு உண்மையாக பாடுப்பட வேண்டும். இம்மாநில அரசு தமிழ் மக்களின், தமிழ்ப்பள்ளியின்  மேம்பாட்டில்  அக்கறை கொண்டு இருப்பதால், மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட ரீதியில் சில நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டே வந்துள்ளது.

அம்பாங் தமிழ்ப்பள்ளி மட்டுமில்லாமல் நாட்டில் உள்ள பல தமிழ்ப்பள்ளிகளின்  அவல நிலைக்குக், காரணமாக இருப்பது பெற்றோர் ஆசிரியர் சங்கங்களில் முக்கிய பொறுப்புகளை எடுத்துக்கொள்ளும் சில சந்தர்ப்பவாதிகளின் செயலும், பாரிசான் அரசு அமல்படுத்திவரும் மாற்றந்தாய் கொள்கைகளுமேயாகும் என்பது அனைவருக்கும் தெரியும்.  

அம்பாங் தமிழ்ப்பள்ளியைச் சுற்றியுள்ள நிலங்கள்  இதர உபயோகத்திற்குப் பற்பல இயக்கங்கள் வசம் உள்ளது என்பதனைக் கடந்த 13-6-2012ல் தினகுரலில் முன்னால்  பெ.ஆ சங்கத் தலைவர் திரு. பொன் ரெங்கன் தெளிவாக எழுதியிருந்தார். ஆக, 59 ஆண்டுகளாக  அம்பாங் வட்டாரத்தில் இயங்கி வரும் ஒரே அரசாங்க தமிழ்ப்பள்ளிக்கு அரை ஏக்கர் நிலங்கூட இல்லாத நிலையில், சுமார் 18 ஆயிரம் சதுர அடி நிலமே சொந்தமா? ஆக, ஒரு தமிழ்ப்பள்ளி முழு அரசாங்க உதவியைப் பெற  6 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கை என்னவானது?

அன்றே தமிழ்ப்பள்ளியை சுற்றியிருந்த பல ஏக்கர் காலி நிலத்தை தமிழ்ப் பள்ளிக்காக, பாரிசானின் மாநில-மத்திய அரசுகள் ஏன் கையகப்படுத்தவில்லை? இது மலேசிய அரசியல் அமைப்பு சட்டத்தின் 85 வது உறுப்புக்கு ஏற்ற செயல்தனே! அரசாங்கப் பள்ளியின் உபயோகத்திற்குத் தேவையான நிலத்தின் விண்ணப்பத்தை, கூட்டரசு அரசாங்கம் பொது அதிகார ஆயத்தின் வழி மாநில அரசிடம் சமர்பிக்க வேண்டியது விதி முறை. ஒரு போலீஸ் நிலையத்தைக் கட்டவோ, அல்லது தேசிய பள்ளியை நிறுவவோ நிலத்துக்கு, நாம் யாரிடமும் யாசகம் கேட்பதில்லை, அது தானாக நடக்கும், ஆனால் தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் மட்டும் ஏன் அது நடக்கவில்லை என்பதே கேள்வி.

இன்று அம்பாங் ஒரு பெரிய நகரம், ஏற்கனவே குடிசை வீடுகள் இருந்த இடத்தை தமிழ்ப்பள்ளிக்கு வழங்க மறுத்து மேம்பாட்டு நிறுவனத்துக்கு விற்று விட்டக் கூட்டம், பக்காத்தான் ஆட்சி மட்டும் சிலாங்கூரில் இன்று மலராமலிருந்திருந்தால் பள்ளியைச் சுற்றியுள்ள எஞ்சிய நிலத்தையும் விற்றுப் பங்கு போட்டிருக்கும் என்பதனை அறிக்கை விடுபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு தமிழ்ப்பள்ளியை முழு அரசாங்கப் பள்ளியாக மாற்ற 6 ஏக்கர் நிலத்தை வழங்குங்கள் என்று முன்னால் கல்வியமைச்சர் ஹிசாமுடின்  துன் உசேன் முழங்கியதும், தங்களின் இயலாமைகளை மறைக்க இப்படிப்பட்டச் சாக்கு போக்குகளையே ம.இ.கா தலைவர்களும் எல்லாக் காலத்திலும் கூறி வந்ததும் எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை! சுமார் 18 ஆயிரம் சதுர அடி நிலம் கொண்ட பள்ளியும் முழு அரசாங்கப் பள்ளியாக முடியும் என்ற உண்மையை அம்பாங் பள்ளி புலப்படுத்துகிறது.

சட்டப்படி ஓர் அரசாங்கப் பள்ளிக்கு வேண்டிய நிலத்தை அடையாளங்கண்டு அதற்கான கோரிக்கையை கூட்டரசு அரசாங்கம் பொது அதிகார ஆயத்தின் வழி மாநில அரசிடம் சமர்பிக்க வேண்டும் என்பதே விதி. அப்படிப் பொது ஆயத்திடமிருந்து கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களை மாநில அரசு உடனடியாகப் பரிசீலித்து அனுமதி வழங்கியுள்ளது. உதாரணமாகப், பொது அதிகார ஆயத்தின் வழி ரவாங் தமிழ்பள்ளிக்கும், கோலக்குபூபாரு தமிழ்ப்பள்ளிக்கும் வந்த நிலக் கோரிக்கைகளை ஆட்சி ஏற்ற சில மாதங்களிலேயே பக்காத்தான் அரசு, நிறைவேற்றிக் கொடுத்துள்ளது.

அதே வேளையில் அரசாங்கப் பள்ளிகளுக்கான நில விண்ணப்பங்களை  பள்ளி வாரியம் சமர்பித்தாலும் அது பொது அதிகார ஆயத்தின்  அனுமதியில்லாமல் மாநில அரசால் அங்கீகரிக்க முடியாது. பத்து ஆராங் தமிழ்ப்பள்ளி நிலத்துக்குக் கோரிக்கை வைத்த அப்பள்ளி வாரியத்தின் விண்ணப்பத்தை  அனுமதிக்க முடியாது என்று பொது அதிகார ஆயம் பதிலளித்துள்ளதைத் தொடர்ந்து அவர்களின் விண்ணப்பம் நில அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டதை மற்றொரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

 ஆக முழு அரசாங்கப் பள்ளிகளாக இயங்கும் தமிழ்ப்பள்ளிகளின் நிலக் கோரிக்கைகளைக் கல்வி அமைச்சின்  மூலம் மட்டுமே மாநில அரசிடம் சமர்பிக்க முடியும் என்பதால் வீணே மாநில அரசைக் குறை கூறுவதை விடுத்து, அம்பாங் தமிழ்ப்பள்ளி போன்ற அரசாங்கப் பள்ளிகளின் நில விவகாரத்தில் மத்திய அரசையும், பாரிசான் அரசியல் வாதிகளையும் வற்புறுத்துங்கள்.  அம்பாங் தமிழ்ப்பள்ளி நிலத்துக்கு மத்திய அரசிடமிருந்து முறையாக விண்ணப்பம் வந்தால் மாநில அரசு அங்கீகரிக்கும் என்பதனை இதன் வழி தெரிவித்துக் கொள்கிறேன்.  

…………………………………………………………………………………………………………………………………………………………….

கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

 

TAGS: