ஹிண்ட்ராப் அரசாங்கத்திற்கு எதிரான தனது வழக்கை மீண்டும் தாக்கல் செய்யும் முயற்சியின் கீழ் அதில் தமிழ்ப் பள்ளிக்கூட மாணவர்களுடைய பெற்றோர்களையும் சேர்த்துக் கொள்ளவிருக்கிறது. அந்த வழக்கில் மற்ற பல கோரிக்கைகளுடன் இந்த நாட்டில் உள்ள 523 தமிழ்ப் பள்ளிகளும் முழு உதவி வழங்கப்பட வேண்டும் என்பதும் அடங்கும்.
“பாதிக்கப்பட்ட வாதிகள் என்ற முறையில் தமிழ்ப் பள்ளிக்கூடங்களில் பயிலும் பிள்ளைகளின் 100 பெற்றோர்களை இணைத்துக் கொள்வதற்காக ஹிண்ட்ராப் இணையத் தளம் ஒன்றை அமைத்துள்ளது. அது துண்டுப் பிரசுரங்களையும் குறுஞ்செய்திகளையும் தயாரித்துள்ளது. சமூக ஊடகங்கள் வழி அது பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளது.”
“மலேசியாவில் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு முழுமையான தீர்வாக அந்த வழக்கு மீண்டும் தாக்கல் செய்யப்படுகின்றது,” என ஹிண்ட்ராப் தகவல் பிரிவுத் தலைவர் எஸ் ஜெயதாஸ் வெளியிட்ட அறிக்கை கூறியது.
இதற்கு முன்னர் தொடுக்கப்பட்ட வழக்கை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஜுன் 20ம் தேதி நிராகரித்தது. அந்த வழக்கில் வாதிகளான ஹிண்ட்ராப் தலைவர் பி உதயகுமாருக்கும் கோத்தா அலாம் ஷா சட்டமன்ற உறுப்பினர் எம் மனோகரனுக்கும் வழக்குத் தொடுப்பதற்கு உரிமை இல்லை என அது காரணம் கூறியது.
“அந்த பொது நல சிவில் வழக்கைத் தொடுப்பதற்கு அவர்கள் இருவருக்கும் உரிமை இல்லை என்று நீதிமன்றம் கூறியது. ஏனெனில் அவர்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர் அல்ல. மாறாக அவர்கள் இந்திய ஏழை மக்களுடைய பொதுவான நலனுக்காக செயல்படுகின்றனர். அத்துடன் அவர்களுடைய பிள்ளைகள் இப்போது இடைநிலைப் பள்ளிக்கூடங்களுக்குச் சென்று விட்டனர். தமிழ்ப் பள்ளியில் அல்ல என நீதிமன்றம் கூறியுள்ளது,” என்றார் ஜெயதாஸ்.
தமிழ்ப் பள்ளிக்கூடங்களின் தகுதி முழு உதவி இல்லாமல் பகுதி உதவி பெறும் பள்ளிகளாக இருப்பதும் கூட்டரசு அரசமைப்பின் 4,8,12வது விதிகளை மீறுகிறது எனப் பிரகடனம் செய்யுமாறும் அந்த வழக்கு கேட்டுக் கொண்டது.
அந்த வழக்கில் இடம் பெற்றிருந்த 16 அம்ச பிரார்த்தனைகளில்—-
– பிரிட்டிஷார் காலத்தில் பலகைக் கட்டிடங்களிலும் கடை வீடுகளிலும் அல்லது கப்பல் கொள்கலங்களிலும் இயங்கும்- 25 மாணவர்களுக்கு மேற்பட்ட தமிழ்த் தொடக்கப்பள்ளிகள் மறுநிர்மாணிப்புச் செய்யப்பட வேண்டும் அல்லது பழுதுபார்க்கப்பட வேண்டும்.
– எல்லாத் தமிழ்ப் பள்ளிக்கூடங்களும் குறைந்தது 10 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டிருக்க வேண்டும்.
– ஒவ்வொரு மாவட்டத்திலில் தங்கும் வசதிகளைக் கொண்ட தமிழ்ப் பள்ளி ஒன்று குறிப்பாக ஏழ்மையில் உள்ள இந்திய மாணவர்களுக்காக கட்டப்பட வேண்டும்.
– தேசியப் பள்ளிகளுக்கு ஒரு மாணவருக்கு வழங்கப்படும் உதவியைப் போன்று அதே விகிதாச்சாரத்தில் உதவித் தொகை தமிழ்ப் பள்ளிகளுக்கும் கொடுக்கப்பட வேண்டும்.
-கிளந்தான், திரங்கானு, பெர்லிஸ் தவிர்த்த தீவகற்ப மலேசியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் தமிழ் இடைநிலைப் பள்ளிகள் கட்டப்பட வேண்டும்.
– “அரசாங்க ஆதரவு பெற்ற மற்றும் தனியார் துறை ஒரே மலேசியா அரசாங்க அநீதிகளுக்கு” இழப்பீடாக 55 பில்லியன் ரிங்கிட் கொடுக்கப்பட வேண்டும்.
இதனிடையே தங்களுடைய முந்திய வழக்கு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உதயகுமாரும் மனோகரனும் அடுத்த வாரம் முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்து கொள்வர் என்ற தகவலையும் ஜெயதாஸ் வெளியிட்டார்.
பங்சாரில் உள்ள ஹிண்ட்ராப் தலைமையகத்தில் அந்தத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த 30 பெற்றோர்களை உதயகுமார் சந்தித்துள்ளார்.
இரு முனை வியூகம்
அது இரு முனை வியூகம் என உதயகுமார் பின்னர் கூறினார். அதன் கீழ் ஹிண்ட்ராப் பழைய வழக்கில் முறையீடு செய்து கொள்வதுடன் புதிய வழக்கை தொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்புக்களை அது ஒன்று சேர்க்கும் என்றார் அவர்.
“இது எங்களுடைய முதல் கூட்டம். அடுத்த கூட்டம் கிள்ளானில் நடைபெறும். அந்த வழக்கில் ஆர்வமுள்ள பெற்றோர்களுடைய பெயர்களை நாங்கள் திரட்டுவோம்,” என்றார் அவர்.
செட்டி திடலில் அமைந்துள்ள கிள்ளான் மாரியம்மன் கோயிலுக்கு பின்புறம் ஜுலை 29ம் தேதி முற்பகல் 11 மணிக்கு அந்தக் கூட்டம் நடைபெறும்.
இந்த நாட்டில் உள்ள தமிழ்ப் பள்ளிகளின் மோசமான நிலை குறித்துப் பேசிய உதயகுமார், சபா பெர்ணாமில் அதிக சக்தி வாய்ந்த மின் கம்பிகளுக்கு அருகில் புதிய தமிழ்ப் பள்ளிக்கூடம் ஒன்று கட்டப்பட்டுள்ளதாக நேற்றைய சினார் ஹரியான் நாளேட்டில் வெளியான செய்தியை சுட்டிக் காட்டினார்.
“அந்தப் பள்ளிக்கூடத்தைக் கட்டும் போது இந்தோனிசியத் தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மாணவர்கள் அந்தப் பள்ளிக்கூடத்துக்குப் போக இப்போது மறுத்து விட்டனர். அவர்கள் தற்காலிக இடத்தை பயன்படுத்துகின்றனர்.”
“மலேசியாவில் நிலம் நிறைய உள்ளது. அதிக சக்தி வாய்ந்த மின் கம்பிகளுக்கு அருகில் தமிழ்ப் பள்ளிக்கூடம் ஒன்று ஏன் கட்டப்பட வேண்டும் ?” என அவர் வினவினார்.