‘pendatang’ என்ற கருத்துக்களை புறக்கணித்து விடுங்கள் என பிரதமர் சீனர்களிடம் சொல்கிறார்

சீன சமூகத்தினரை ‘pendatang’ (குடியேறிகள்) என சிலர் அழைத்ததால் மனம் புண்பட வேண்டாம் என அந்த சமூகத்தை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

காரணம் அத்தகையை கருத்துக்களை ‘கிறுக்கர்களான’ சிலரே கூறியுள்ளனர் என்றார் அவர்.

சீன சமூகத்தினரின் உணர்வுகளைக் காயப்படுத்தும் பொருட்டு வேண்டுமென்றே சிலர் அந்தக் கருத்துக்களை சொல்லியிருக்கின்றனர். ஆனால் தமது நிர்வாகம் அந்தக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்றார் அவர்.

“நாம் ஒரிரு கருத்துக்களினால் மனம் புண்படுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என நான் நம்புகிறேன். ஒவ்வொரு சமூகத்திலும் மூளை சரியில்லாத ஒரிருவர் இருக்கத் தான் செய்கின்றனர்.”

நஜிப் நேற்று மலாயாப் பல்கலைக்கழகத்தில் 2,000 சீன இளைஞர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போது பிரதமர் அவ்வாறு கூறினார்.

‘pendatang’ என சீன சமூகத்தினரை முத்திரை குத்தியவர்களுக்கு எதிராக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது என பங்கேற்பாளர்களில் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.

“அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் கூட புளோரிடா மாநிலத்தில் தேவாலயம் ஒன்றின் போதகர்,  திருக்குர்-ஆனை எரிக்க விரும்பினார். அது சின்ன விவகாரம்,” என்றார் அவர்.

இந்த நாட்டில் முழு உரிமை பெற்ற பிரஜைகளாக தமது நிர்வாகம் சீன சமூகத்தினரை முழுமையாக அங்கீகரிக்கிறது என்றும் நஜிப் வாக்குறுதி அளித்தார்.

“ஒரிரு கிறுக்கர்கள் இருந்தால் அதனால் மனம் புண்பட வேண்டாம். அரசாங்கம் மலேசியச் சீனர்களை ‘pendatang’ எனக் கருதவில்லை என்பதே முக்கியமானது. நீங்கள் முழு உரிமைகளைக் கொண்ட பிரஜைகள்.”

“மூளை இல்லாத சிலர் சொல்லும் கருத்துக்களைப் பிரச்னையாக்க வேண்டாம்,” எனக் கூறிய அவர் அத்தகைய கருத்துக்களை சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளிக்கவில்லை.

அண்மைய ஆண்டுகளாக பல அரசாங்க ஊழியர்களும் அம்னோ அரசியல்வாதிகளும் மலாய்க்காரர் அல்லாதாருக்கு எதிராக இனவாத அவதூறுகளை பகிரங்கமாக கூறியுள்ளனர்.

2008ம் ஆண்டு பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ‘pendatang’ என்ற சொல்லைப் பயன்படுத்திய பினாங்கு அம்னோ அரசியல்வாதி அகமட் இஸ்மாயில் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

ஆனால் அவருக்கு எதிராக எந்த கிரிமினல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; அதற்குப் பதில் அகமட் இஸ்மாயில் உரையை செய்தியாக அனுப்பிய பத்திரிக்கையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

2010ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஆயுதப் படைகளில் சீனர்கள், இந்தியர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பது குறித்து விளக்கமளித்த தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி சீனர்களும் இந்தியர்களும் “போதுமான அளவுக்கு விசுவாசமாக இல்லை” எனக் கூறி சலசலப்பை ஏற்படுத்தினார்.

அதே ஆண்டு இரண்டு ஆசிரியர்கள் மலாய்க்காரர் அல்லாத மாணவர்களிடம் இனத்துவேஷ வார்த்தைகளை கூறியதாக தெரிவிக்கப்பட்ட பின்னர் பிரச்னை எழுந்தது.

நாடு தமது மொழிகள் உட்பட பல்வகைத் தன்மைகளைக் கொண்டு வலிமை பெற வேண்டும். வேறுபாடுகளை பிரச்னைகளாக எண்ணக் கூடாது என்றும் நஜிப் சொன்னார்.

 

 

TAGS: