தேர்தல் ஆணையம்(இசி) அடுத்த பொதுத் தேர்தலைக் கண்காணிக்க உள்நாட்டில் ஐந்து என்ஜிஓ-களைப் பார்வையாளர்களாக தெரிவு செய்துள்ளது.அவை ஆணயத்தின் நிபந்தனைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும். ஊடகங்களிடம் பேசக்கூடாது என்பது நிபந்தனைகளில் ஒன்று.
நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் செய்தியின்படி ஜனநாயக, பொருளாதார விவகாரக் கழகம்(ஐடியாஸ்),சுயேச்சை கருத்துக்கணிப்பு மையமான மெர்டேகா மையம், ஆசிய வியூக, தலைமைத்துவக் கழகம்(அஸ்லி), ட்ரேன்ஸ்பேரன்சி இண்டர்நேசனல் மலேசியா(டிஐ-எம்), மனித உரிமை மேம்பாட்டுச் சங்கம்(ப்ரோஹாம்) ஆகியவை கண்காணிப்புப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அவை எந்தக் கட்சியையும் சாராதவை என்பதும் நிபுணத்துவம் வாய்ந்த அமைப்புகள் என்பதும் அவை தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணங்கள் என்று இசி தலைவர் அப்துல் அசீஸ் முகமட் யூசுப் கூறினார்.
“இசி-யைப் பொருத்தவரை ஒளிப்பதற்கு ஒன்றுமில்லை.அதனால்தான் 13வது பொதுத் தேர்தலைக் கண்காணிக்க உள்நாட்டு, அனைத்துலகப் பார்வையாளர்களை அமர்த்த முடிவு செய்துள்ளோம்”, என்றவர் கூறியதாக அந்நாளேடு கூறியது.
ஐந்து என்ஜிஓ-களும் இசி-இன் நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும்.
“அவை,தேர்தல் நடைமுறைகளில் தலையிடக் கூடாது.முக்கியமாக தேர்தல் பற்றி ஊடகங்களிடம் பேசவோ அறிக்கை விடவோ கூடாது.”, என்றார் அசீஸ்.
இந்த இடத்தில் சுதந்திரமான, நியாயமான தேர்தல் வேண்டும் மலேசியர்கள்(மேப்ரல்) என்ற அமைப்பின் நிலை என்னவென்று தெரியவில்லை. அதையும் ஒரு கண்காணிப்பு அமைப்பாக இசி ஒரு நேரத்தில் நியமனம் செய்தது.பின்னர், அது மாற்றரசுக் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டியது.
பல இடைத் தேர்தல்களைப் பார்வையிட்ட மேப்ரல், அவை முறையாக நடத்தப்படவில்லை என்று இசி-யையும் தேர்தல் நடைமுறைகளையும் குறைகூறி அறிக்கைகள் வெளியிட்டது.
பன்னாட்டுப் பார்வையாளர்கள் பற்றிக் குறிப்பிட்ட அசீஸ், எந்தெந்த நாடுகள் மலேசியாவைக் கண்காணிப்பாளராக அழைத்திருந்தனவோ அந்நாடுகள் பார்வையாளர்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படும் என்றார்.
“வட்டார அளவில் ஆசியான் உறுப்புநாடுகள் அழைக்கப்படும்.புருணை அழைக்கப்படாது, ஏனென்றால் அங்கு தேர்தல் நடப்பதில்லை.சிங்கப்பூர் அழைக்கப்படாது.ஏனென்றால் அதன் அண்மைய தேர்தலுக்கு நாம் கண்காணிப்பாளரை அனுப்ப செய்த விண்ணப்பத்தை அது நிராகரித்துவிட்டது”, என்றாரவர்.
ஐநா போன்ற பன்னாட்டு அமைப்புகளை அழைப்பது பற்றியும் ஆலோசித்து வருவதாக இசி கூறியது.